31.3.11

கொள்ளிகள் எரியும் கூட்டத்தில் நாடு தீபம் தேடிக்கொண்டிருக்கிறது


கட்சிகளுக்கான மாவட்டச்செயலாளர்கள் தேர்வாகட்டும்,அந்தக்கட்சிகளுக்கான வேட்பாளர்கள் தேர்வாகட்டும் அந்த மாவட்டத்தில் எந்த ஜாதியினர் கணிசமாக இருக்கிறார்கள், அங்கு எந்த ஜாதியின் ஆதிக்கமிருக்கிறது என்பதைப்பொறுத்தே தேர்வுகள் நடக்கிறது.உதாரணமாக வன்னியர் அதிகமாக வாழும்  ஏரியாவில் அந்த பகுதியில் அதிகம் இல்லாத இனத்தவரான நாயக்கரோ நாடாரோ போட்டியிடுவதில்லை, போட்டியிட்டதாக சரித்திரமும் இல்லை பூகோளமும் இல்லை.நாயக்கர் ஓட்டுக்கள் அதிகமாக இருக்கும் பகுதி என்பதற்காக ஒருகாணி நிலம் கூட இல்லாத நாயக்கருக்கு சீட் வழங்கப்படுவதில்லை. அதெல்லாம் வசதி படச்ச நாய்க்கமாருக்கு என்கிற ’தண்ணீர் தண்ணீர்’ வசனம் தான் நினைவுக்கு வருகிறது.எந்தக்கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் மாண்டேக் சிங்க் அலுவாலியா தான் திட்டக்கமிஷன் தலைவர்.அதேபோல பாகிஸ்தானில் குடியுரிமை பெற்றுக்கொண்டு அங்கு தங்கி இருந்தாலும் நம்ம பசி க்கு ஒரு காபினெட் போஸ்ட் உறுதி.

கடைந்தெடுத்த ஜாதி,பண்ணையார்த்தனம்,உலகமயம் மூன்றும் கூட்டுச்சேர்கிற ஜனநாயகம் இது. நாம் பெயர்களுக்கு முன்னால்  வேண்டுமானால் மானே தேனே போட்டுக்கோ என்று சொன்னமாதிரி புரட்சி,சமத்துவம் என்கிற வார்த்தைகளைப் போட்டுக் கொள்ளலாம்.ஆகவே புரட்சித்தமிழன், புரட்சிக்கலைஞர்,புரட்சித்தலைவி,சமத்துவமக்கள்கட்சி,புரட்சிபாரதம் என்கிற மாதிரியான பெயர்களை வைத்துக்கொண்டு இப்போதைக்கு ஆறுதலடைந்து கொள்ளலாம். அல்லது ஆஹா வந்துவிட்டது புரட்சி எனப் பீத்திக்கொள்ளலாம். கண்ணங்கரேர்னு இருக்கிற எங்க பெரியப்பனுக்கு வெள்ளைச்சாமின்னு பேர்வச்ச மாதிரித்தான் இங்கு கதைகள் நடக்கிறது. இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சக்கரையம். இங்கே கொமுட்டிக்காயே சக்கரை.

அன்று முன்பதிவுக்காக புகைவண்டி நிலையத்தில் காத்திருக்க நேர்ந்தது.அருகில் உட்கார்ந்திருந்த கரைவேட்டிக்காரர் எந்தக் கரையாயிருந்தாலென்ன அது கறைதான். காங்கிரசையும் சேர்த்து அவை ஒரே குட்டையில் ஊறிய மட்டையே. அவர்  வார்டு வார்டாக ஜாதியின் பெயரையும் அங்கு எத்தனை ஓட்டுக்கள்  என்பதையும் புட்டுப்புட்டு வைத்தார். அவர் ஒரு முழு நேர அரசியல்வாதி.போன தேர்தலில் ஒரு வாக்குக்கு என்ன விலை என்பதையும் இந்த தேர்தல் நேரத்தின் விலைவாசி ஆகியவற்றோடு கணக்குப்பார்த்து எவ்வளவு கொடுத்தால் ஜெயிக்கலாம் என்பதையும் துல்லியமாகச்சொன்னார். அத்தோடு மட்டுமில்லாது தேர்தல் கமிஷன் நெருக்கடி கொடுத்தால் அதைச்சமாளிக்க என்னென்ன தந்திரோபாயங்களை கையாள்வதென்றும் பட்டியலிட்டார். எங்கூர்ல ’கள்ளம்பெருசா காப்பாம் பெருசா’ அப்படீன்னு ஒரு பழமொழி உண்டும்.

5 comments:

Unknown said...

வழிமொழிகிறேன்,,,

ஈரோடு கதிர் said...

குறிப்பிட்ட தொகுதியை போராடி வாங்கிய சாதிக்கட்சிகள் கூட அந்தப் பகுதியில் வேறு சாதிக்காரர்களை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில்!!! ((:

MANO நாஞ்சில் மனோ said...

நானும் வழி மொழிகிறேன்....

hariharan said...

//எந்தக்கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் மாண்டேக் சிங்க் அலுவாலியா தான் திட்டக்கமிஷன் தலைவர்.அதேபோல பாகிஸ்தானில் குடியுரிமை பெற்றுக்கொண்டு அங்கு தங்கி இருந்தாலும் நம்ம பசி க்கு ஒரு காபினெட் போஸ்ட் உறுதி.//

இதெல்லாம் வெள்ளை மாளிகையில் எடுக்கப்படும் முடிவு.

நிலாமகள் said...

//வேண்டுமானால் மானே தேனே போட்டுக்கோ என்று சொன்னமாதிரி புரட்சி,சமத்துவம் என்கிற வார்த்தைகளைப் போட்டுக் கொள்ளலாம்//எந்தக் கரையாயிருந்தாலென்ன அது கறைதான்.// ’கள்ளம்பெருசா காப்பாம் பெருசா’//

):