வெகுதூரம் நிற்காமல் ஓடிய ஓட்டைப்பேருந்து போல. நிற்கப்போகும் போது நெடு நேரம் உருமி விட்டு ஓய்வெடுத்துக்கொண்டது தேர்தல்.திரும்ப இயக்குவதற்கு இன்னும் ஒரு மாதம் காத்திருக்கவேண்டும்.அதுவரை அது மலங்க மலங்க முழிச்சுக்கிட்டு இருக்கும்.அதுவரை திருவாளர் தேர்தல் ஆணையம்தான் ஒரு மாத முதல்வர்.அப்புறம் நம்ம அம்மா ஜெயித்து விட்டால் தமிழகத்தில் சமூக பொருளாதார அரசியல் மாற்றம் வந்தே தீரும். ஆதலால் ஜப்பான்,சீனா,மாதிரி இங்கு நில நடுக்கமும் சுனாமியும் ஒருக்காலும் வராது. மாறி மாறி இந்த அதிமுகவும் திமுகவும் வந்து போனாலே போதாதா?.நித்தம் நித்தம் பத்துச்செருப்படி வாங்கிக் கொண்டிருப்பவனுக்கு சவுக்கடி வலிக்காது. சரி இது எப்போ மாறும் என்று அப்பாவியாகக் கேட்கிற ஜனங்களுக்கு பதில் சொல்ல வரிசையாக விஜயகாந்த், ரஜினிகாந்த், விஜய், தனுஷ்காந்த் என்று ஒரு பெரும் பட்டாளம் வரிசையில் நிற்கிறது.( தகுதியு திறமையும் பொங்கி வழிகிற எதிர்கால முதல்வர்கள் எவெரேனும் விட்டுப்போயிருந்தால் தயை கூர்ந்து தழிச்சமூகம் என்னை மன்னிக்கட்டும்).
பிடிக்கும், பிடிக்காது கொள்கை அரசியல் கூட்டணி அரசியல் எல்லாவற்றையும் தள்ளிவைத்து விட்டு நான் வருந்துகிற ஒரே விஷயம் அய்யா வைகோ அவர்கள் புறக்கணிக்கப்பட்டது குறித்துத்தான்.திமுக வை விட்டு வெளியேறி தனியே ஒரு கட்சி ஆரம்பித்தவுடன் 2011 ஆம் ஆண்டு தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக வருவார் என்று என்னைப்போல நினைத்த எண்ணிக்கையிலடங்கா தமிழர்களின் கணிப்பை தவிடு பொடியாக்கி விட்டது சமகால அரசியல்.தான் பேசவேண்டியதை மண்டபத்தில் எழுதி வாங்கி வாசிக்காத பேச்சாளன். நிறைய்ய இலக்கியம் படிக்கிறவர்,நிறைய்ய உலக அரசியல் படிக்கிற வாசகர். பாவம் இந்தச்சதுரங்கக் காய்நகர்த்தலில் கட்டங்களுக்கு வெளியே நிற்கிறார்.அந்தப் பாவத்துக்கு பரிகாரம் இன்னும் எத்தனை வருடங்கள் இந்த தமிழகம் அனுபவிக்கப்போகிறதோ தெரியவில்லை.
அதுகிடக்கட்டும் அரசியல். எனக்கு ஜெயலலிதா அவர்களை நிறைய்யப் பிடிக்கும் நடிகர் திலகத்தோடு இணைந்து நடித்த அத்தணை படங்களையும் குறைந்த பட்சம் நாலு தரமாவது பார்த்திருப்பேன். குறிப்பாக தெய்வமகனும், கலாட்டாக்கல்யாணமும்,இன்ன பிறவும்.புற்கள் நிறைந்திருக்கும் அந்த மலை முகடுகளில் எஸ்பிபி குரலை தன்குரலாக்கிப் ’போட்டுவைத்த முகமோ’ என்று பாடும் போது எற்படுகிற பரவசம் சொல்லில் அடங்காது.
நடிகை என்று சொன்னவுடன் பழய்ய நடிகைகளில் ஒருவர் நடிப்பு அலாதியாக இருக்கும் அவர் பேர் சட்டென நினைவுக்கு வரவில்லை.அவரது தனிச்சிறப்பு வாய்ந்த நடிப்பும் அதைவிடப்பிடிக்கும்.தோசைக்கரண்டியை முகத்து நேரே நீட்டிக்கொண்டு பேசுகிற மாதிரி சோத்தாங்கையை வைத்துக்கொண்டு வசனம் பேசுவார்.கோபம் சந்தோசம்,பரிதாபம்,திகைப்பு என எல்லாவற்றிற்கும் தோசைக்கரண்டியையே நீட்டுவார்.
தோசை என்று சொன்னவுடன் இப்போது படாரென்று நினைவுக்கு வருவது மதுரை. மதுரைக்குள் சமீபமாக நுழைகிற எல்லோருக்கும் கொடுக்கப்படுவது கையில் ஒரு அருவாளும் வாயில் அண்ணன் அஞ்சா நெஞ்சன் என்கிற வார்த்தையும் தான்.தன்னை துதிபாடாத எதையும் மதுரைக்குள் நுழைய விடுவதில்லை என்பதில் வெற்றிபெற்ற அவர் ஆட்சியர் சகாயத்தின் வரவால் கதிகலங்கிப்போனார்.காலம் தோசையத் திருப்பிப் போட்ட மாதிரி போட்டுவிட்டது.
கடைசியாக ஒன்று கிட்டத்தட்ட சாத்தூர் முழுவதும் இருப்பவர்கள் 200ம் வரப்போகிறவர்கள் 50ம் விநியோகித்துவிட, விட்டுப்போனது எங்கள் ஏரியா தான்.என் ஜி ஓ காலனி, குயில்தோப்பு எல்லாம் நடுத்தரவர்க்கம் இருக்கிற கான்க்ரீட் வீடுகள்.எனவே இரண்டு பேரும் கொடுக்கவில்லையாம். ஆனால் ஆத்திரம் அடைந்த ஒரு அம்மா கொடுப்பதற்கு நியமிக்கப்பட்டவரை இப்பொழுதுவரை அவளே இவளே என திட்டித்தீர்த்துக் கொண்டிருக்கிறார்.
5 comments:
கிடக்கட்டும் விடுங்க. நீங்கவாவது ஓட்டு போட்டீங்களா?
வாங்க தோழர்.
வணக்கம் தோழர்.வாக்கைபதிவு செய்யவில்லை.போட்டேன்.
வணக்கம் தோழரே!
நானும் வைகோ அரசியலில் பெரிய சக்தியாக வருவார் என நினைத்தேன், ஆனால் அவரும் திமுக, அதிமுக என அவர்களுடன் கால்த்தை ஓட்டிவிட்டதால் மக்கள் அவரை தனியா சிந்திக்கவில்லை, மதவாதத்தையும் பெரியாரையும் பேசிவிட்டு காவிகூட்டத்திலும் கரைந்தார். அவருடைய பேச்சாற்றல் அவருக்கு பலம், புத்தக வாசிப்பில் அவருக்கு இணையாக அவ்ருடைய இயக்கத்தில் யாருமே இருக்கவில்லை. இவ்வளவு திறமை ஞானம் உள்ளவர் முதலாளித்துவ அரசியலில் இருப்பது தான் வேதனை.
வை.கோ.வின் பேரில் ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்ததும் அது பொய்த்துப் போனதும் தமிழக அரசியலின் துரதிர்ஷ்ட்டம்.
கருணாநிதிக்குப் பின் வை.கோ.தான் என்ற கணிப்புக்கு காலம் பெருத்த தடையாகிவிட்டது.
அவர் நடத்திய பாதயாத்திரை பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது.
இப்போதும் அவர் கழகங்கள் சாராத யதார்த்தமான அரசியலுக்கு மாற்றத்துக்கு முனைவாரானால் அதன் பலன் கிட்டக்கூடும்.
நடுத்தரவர்க்கம்தான் காசு வாங்கறதிலேயும் பாவப்பட்டது போல! :)
Post a Comment