8.4.11

மே பதினான்காம் தேதிக்குப்பிறகு என்னென்ன நடக்கும்


எங்கு திரும்பினாலும் நம்ப முடியாத செய்திகளாகவே இருக்கின்றன.எதை நம்ப எதை நம்பாமல் இருக்க நீங்களே சொல்லுங்கள்.

ஜெயலலிதா நடத்திய கோவை பிரச்சாரக் கூட்டத்திற்கு திரண்டிருந்த மக்களைப் பார்த்தால் கலைஞரின் குடும்பத்தைத் தவிர ஒட்டுமொத்த தமிழகமே வந்திருந்தது போலத் தோன்றுகிறது.மதுரையில் நடந்த திமுக கூட்டணி பிரச்சாரத்திற்கு வந்திருந்தவர்கள் வரிசை நீண்டு கொண்டே போய் வாஹா எல்லையைத் தொட்டுவிடும் போலிருக்கிறது. சன்குழுமங்களும் ஜெயா பரிவாரங்களுமாக தொலைக்காட்சி சேனல்கள் எதிரெதிராகக் களமிறங்கி படம் காட்டுகிற தேர்தல் செய்திகளால் மக்களுக்கு கிறுக்குத்தான் பிடித்துப்போகும். இதுக்கு பேசாமால் அந்த சீரியல் நாடகங்களுக் குள்ளேயே புதைந்தும், விளம்பரங்களுக்குள் நனைந்து ஊறி முளைத்தும் போகலாம்.

அச்சு ஊடகங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். தன் ஆயுளில் பாதி நாளை உண்ணாவிரத்ததில் கழித்துக்கொண்டிருக்கும் மணிப்பூரின் இரும்புப்பெண் ஐரோம் ஷர்மிளாவைப்பற்றி செய்தி போடத்துணியாத பத்திரிககள். மத்தியில் விபி சிங் அரசு கவிழ்ந்ததும்.முதல் பக்கத்தில் முக்கால்வாசியை விபி சிங் அரசு கவிழ்ந்தது என்கிற தலைப்பைப்போட்டு சந்தோஷம் கொண்டாடிய பத்திரிகைகள்.கம்யூனிஸ்ட் கட்சிக்காரன் வயிற்று உபாதையால் குசுப்போட்டாலும் இந்தியாவை மாசு படுத்திவிட்டார்கள் என்று செய்தி போடுகிற ஊடகங்கள். இந்தியா மாற்றத்தை தேடுகிறது என்று பிதற்றுகிறார்கள். மாற்றம் என்கிற சொல்லைத் தவிர மற்றவையெல்லாம் மாறும் என்று சொன்ன அந்த தாடிக்கார மனுஷன் ஏளனச்சிரிப்புச் சிரிக்கிறார்.

எங்கள் தீக்கதிர் பத்திரிகையில் அம்மா சிரித்தபடி போஸ்கொடுக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒற்றையாய் உலக உருண்டையைத் தூக்கினாலும் ஒரு வரிச்செய்தி கூடப்போடாத தினமணியும் தினமலரும் தோழர் பிரகாஷ் காரத்,தோழர் என்.வரதராஜன் பேச்சுக்களை முதல்பக்கத்தில் போடுகிறார்கள். விலைவாசிக் கெதிராக டெல்லியில் நடைபெற்ற இடதுசாரிக்கட்சிகளின் கூட்டத்தையும் அந்த ஆர்ப்பரிப்பையும் இருட்டடிப்பு செய்த கொயங்கா குழுமங்கள் எப்போது சிவப்புக்கு மாறியது ? இயேசுவின் வருகை சமீபித்துவிட்டது என்கிற மாதிரி புரட்சி சமீபித்துவிட்டதா?  என்ன நடக்கிறதென்றே விளங்கவில்லை.

அங்கே அஞ்சு கோடியைப் பிடித்தார்கள் இங்கே பத்துக்கோடியைப் பிடித் தார்கள் என்கிற செய்திகள் ஒருபக்கம் கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் வரிசையில் நிற்கவைத்து டோக்கன் கொடுக்கிற பணத்திமிரையும், அதற்காக மக்கள் அடிச்சுப்பிடிச்சி வரிசையில் நிற்கிற அவலங்களை நேரில்பார்க்கும் போது மனம் பதறுகிறது. பக்கம் பக்கமாக ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பற்றிப் பேசுகிற எழுதுகிற பத்திரிகைகள் அதில் பங்கெடுத்துள்ள பௌஅனடைந்துள்ள நிறுவணங்கள் பற்றிய செய்தியைக் கசியவிடாமல் பாதுக்காத்துக் கொள்வது ஏனென்றே விளங்கவில்லை.

இருப்பிடச் சான்றிதழுக்காக கையெழுத்துப் போட்டுவிட்டு இருநூறு ரூபாய் வாங்கிய அந்த கிராம நிர்வாக அலுவலர் சொன்னார் காலங்கெட்டுப்போச்சி சார் ஒரு லட்சத்தி எழுபத்தாறாயிரம் கோடி.அதுக்கு எத்தன சைபர் போடுவதென்றே விளங்கவில்லையென்று. கையெழுத்து வாங்க வந்தவர் அப்பாட தப்பித்தோம் இந்த இருநூறு ரூபாயோடு போச்சே என்று உள்ளுக்குள்  சந்தோசப் பட்டுக் கொண்டு வெளியில் சிவாஜி போலச் சீரியசாக முகத்தை வைத்துக்கொண்டார்.

ஊருக்குப்போயிருந்தேன் அந்த அதிமுக கட்சிக்காரர் எங்க சித்தப்பாதான் சில சந்தேகங்கள் கேட்டார். ஏம்பா கலைஞர் கட்சிக்காரங்க போடுற சினிமாப் பாட்டெல்லாம் எம்ஜியார் பாட்டா இருக்கே,திமுக கூட்டணிவேட்பாளர் வாறாராம் ஆனா திருமாவளவன் கொள்கை விளக்கப்பேச்சைப்போட்டு முழக்குறாங்க. ஊருக்குள்ள வர்ற எல்லா வேன்கள்ளயும் பதினாலு கலர்ல கொடிப்பறக்கே அவிங்க போஸ்டர்லேயும் பெரியார், அண்ணா, காமராசர், தேவர், அம்பேத்கர், ஒரு முஸ்லீம் தலைவர் இருக்காங்க இவிங்க அடிக்கிற போஸ்டர்லேயும் இதே தலைவர்கள் இருக்கங்களே என்று காம்ப்ளான் குடிக்காத குழந்தை மாதிரி கேள்விகள் கேட்கிறார்.

நான் என்ன சொல்லட்டும் ?.

மே பதினான்காம் தேதியும் இதே போலத்தான் மின்சாரவெட்டு நீடிக்கும். புரட்சித்தலைவி முதல்வரானாலும், தானைத்தலைவர் முதல்வரானாலும் ஒரு லிட்டர் அக்வா பீனாத் தண்ணீர் பணிரெண்டு ரூபாய்க்குத்தான் விற்கும். மே பதினான்காம் தேதிக்குப்பிறகு அவர் அங்கே தாவினார்,இவர் இங்கே குதித்தார் என்கிற விளையாட்டுச்செய்திகள் வரும். மே பதினான்காம் தேதிக்குப்பிறகு பெட்ரோல் விலை லிட்டருக்கு பணிரெண்டாகக் குறையப் போவதுமில்லை, அரிசி விலை அஞ்சு ரூபாய்க்கு இறங்கப் போவதுமில்லை. மே பதினான்காம் தேதிக்குப்பிறகும் தனியார் வெட்டிய வாய்க்கால் மூலமாகவோ அரசு பதித்த குழாய்கள் மூலமாகவோ சீமைச்சாராயம் கட்டாயம் ஆறாக ஓடத்தான் போகிறது.

அதன்பிறகு பாருங்கள் எல்லாக் கலர் கொடியும் இறங்கி இளைப்பாறப் போய்விடும்,ஒரே ஒரு கலர்க்கொடி மட்டும் பிரச்சினைகளைப் பேசியபடி இறங்காமல் பறந்துகொண்டிருக்கும் என்று சொல்லிவிட்டு வந்தேன்.

9 comments:

Anonymous said...

முதல்வரைத் தவிர ஒன்றும் மாறாது ..................

ஓலை said...

Absolutely true. Nothing is going to change for the people.

Unknown said...

எனக்கென்னமோ ஒரு மாற்றத்திற்க்கான விதை முளைவிட ஆரம்பித்துவிட்டது போலத்தான் தோன்றுகிறது அண்ணே...

hariharan said...

இரண்டும் ஒரே குட்டையி ஊறிய மட்டை தானே, மாற்றம் எங்கிருந்து வரும். இக்பால் சொன்னமாதிரி முதல்வர்கள் மாறுவார்கள்.

சாதாரணமக்களை வாட்டுகிற விலைவாசி குறையாது, உலக்வங்கியிடம் கடன்வாங்கியாவது அதில் கொள்ளையடிப்பது குறையாது. அள்ளிக்கொடுக்கும் வரிச்சலுகைகள் வெளியில் தெரியாது, கிள்ளிக்கொடுக்கும் இலவசங்களை இந்த ஊடகங்கள் ஊதிப்பெருக்கும்.

அரசு (மக்கள் பணத்தை )கஜானாவிலிருந்து செலவு செய்யும் திட்டத்தை தந்து பெயரை சூட்டும் கேவலமான சிந்தனை இந்த தமிழக்த்தெற்கே உண்டு.

Ashok D said...

//எனக்கென்னமோ ஒரு மாற்றத்திற்க்கான விதை முளைவிட ஆரம்பித்துவிட்டது போலத்தான் தோன்றுகிறது அண்ணே... //

உண்மைதான்

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

கண்டிப்பாய் மே 15 வரும்.

ஜோக்கை விடுங்க காமராஜ்.

ஒரு மாற்றத்தின் ஊற்றுக்கண் திறப்பது போலத்தான் தெரிகிறது.

செந்திலும் அஷோக்கும் முந்திக்கொண்டுவிட்டார்கள்.

அன்னா ஹஸாரேயால் ஏற்றப்பட்டிருக்கும் சுடர் வெகுதூரம் செல்லும் என்று தோன்றுகிறது காமராஜ்.

kashyapan said...

மாற்றம் வரும்.ஆனால் மக்களின் ஆவேசத்தை குறைக்கும் sefty valve ஆக மாறும். அதுதான் அவர்களின் திட்டமும் கூட.. அதற்காக விரக்தி அடைய வேண்டியதில்லை தோழர்களே.---காஸ்யபன்

இடதுசாரி said...

யாரும் முதல்வர் ஆகி விட்டு போகட்டும் .. மார்க்சிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ. எண்ணிக்கை உயரும். மக்களின் சகல பிரச்சனைகளும் தீரும் வரை செங்கொடி கீழே இறங்க போவதில்லை.

vimalanperali said...

எது நடந்தும் எதுவும் ஆகப்போவது இல்லை.இலவசகல்வியும்,வேலை
வாய்ப்பும்,ஸ்திரமான வாழ்க்கையும் உத்திரவாதப்படும் வரை அறிக்கைகளை நம்பி மோசம் போவதும்,இப்படியான் கேள்விகளும்,கட்டுரைகளும் தவிர்க்கமுடியாதுதான்.