தினத்தந்தித் தொடர் சிந்துபாத்துக்குப் பிறகு புத்தகவடிவில் ஈர்த்தது படக்கதைகள் தான். இரும்புக்கை மாயாவியும் துப்பறியும் ரிப்கர்பியும் சீனர்களையும்,ரஷ்யர்களையும் நம்பியாராக்குவார்கள்.இந்த தலைமுறை ச் சிறார்களுக்கு அந்த புத்தகங்களும் அமெரிக்க காமிக்ஸ் நாயகர்களும் அறிமுகமாகிறார்களா என்பது தெரியவில்லை. அப்புறம் ராணிமுத்துவில் வந்த சின்ன சின்ன கதைகள்.அப்புறம் சினிமா சினிமாப்பாட்டுப் புத்தகம் அதில் வரும் கதைச்சுருக்கம். மிகுதியை வெள்ளித்திரையில் காண்க என்கிற சொல் தியேட்டர்களை நோக்கி கரகரவென்று இழுத்துக்கொண்டு போகும்.
அப்போதெல்லாம் தரை டிக்கெட் 25 பைசாதான்.அதை வாங்க தர்ணா, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், வேலை நிறுத்தம் என எல்லா போராட்ட யுக்திகளையும் பயன்படுத்திக் கடைசியில் தோற்றுப்போவோம். அதற்கு ரெண்டு காரணங்கள் ஒன்று சின்னவர்கள் சினிமா பார்ப்பதெல்லாம் அந்தக்காலத்தில் தீயபழக்கம். ஒண்பதாம் வகுப்பு படிக்கும்போது சாத்தூர் விடுதிவாசம் காலையிலும் சாயங்காலமும் பள்ளிக்கூடத்துக்கு போகிற போது முக்குலாந்தக்கல்லில் ஒட்டப்பட்டிருக்கும் வால்போஸ்டர்களை பத்து நிமிடம் நின்று பார்த்து விட்டுத்தான் கிளம்புவோம். அப்படிப்பார்த்துக் கொண்டிருப் பவர்களை வகுப்பு வாத்தியாரிடம் காட்டிக்கொடுக்க ஒற்றர்களெல்லாம் உண்டு.அப்படித்தான் ஒருநாள் வாணிஸ்ரீயின் வளைவு களைப் பார்த்து லயித்துப்போய் நின்றுகொண்டிருந்த என் முதுகில் மொத் தென்று விழுந்தது ஒரு அடி.பின்னாடித் திரும்பிப்பார்த்தால் மீசை யில்லாத கருப்பசாமி மாதிரி எங்க தாத்தா. "வாயக்கட்டி வயித்தக்கட்டி படிக்க அனுப்புனா......... டவுனுக்குள்ள போஸ்டர மேய்ற கழுத மாதிரி...... வாயத் தொறந்துக்கிட்டு நிக்கே" என்று விரட்டினார்.
மீசை அரும்பிய பிறகு விடுமுறை நாட்களைக் கடத்த நூல் நிலையத்துக்குப் போவோம். அங்கிருந்துதான் புத்தகங்கள் என்னை ஆக்ரமிக்கத் தொடங்கியது. சோமுவாத்தியார்,ஜவுளிக்கடை ஆறுமுகச்சாமி போஸ்ட்மேன் அண்ணா மலைச்சாமி,பல்ராஸ் எல்லோரும் பத்து ரூபாய் டிப்பாசிட் கட்டி சந்தாதாரர் ஆக்கக்கூடிய வசதிபடைத்தவர்கள். அவர்கள் படித்து முடித்த புத்தகங்கள் அண்ணன் அந்தோணிக்கு வரும் அவன் அசந்த நேரத்தில் நான் படிப்பேன். எங்கள் தமிழாசிரியரும் நாடறிந்த எழுத்தாளருமான தனுஷ்கோடிராமசாமி தனது பிரசுரமாகும் முன்னே கதைகளை எங்கள் வகுப்பில் கண்ணை உருட்டி உருட்டிச்சொல்லுவார்.
கல்லூரிக்குப்போனதும் கிடைக்கிற நேரமெல்லாம் நூல்நிலையத்தில் உட்காரும் பழக்கம் ஏற்பட்டது.அண்ணன் அந்தோணி தான் படித்த புத்தகங்களைப் பற்றிப்பேச ஆள் வேண்டி அதை என்னையும் படிக்கச் சொல்லுவான். அவன் படிக்காத புத்தகங்களாகப் படிக்கவேண்டும் என்கிற போட்டி மணப் பான்மையால் அப்போது கிடைத்த அயல் நாவல்களை எடுத்துப்படிக்க ஆரம்பித்தேன். நூலகர் பழனிச்சாமி ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்காரர் ஆகையால் ரஷ்ய நாவல்கள்,ஜெயகாந்தன்,யுனெஸ்கோ கூரியர் போன்றவற்றைக் கொடுத்துப் படிக்கச்சொல்லுவார். ஆனாலும் ஜெயராஜின் ஓவியத்துக்கும் மணியம் செல்வன் ஓவியத்துக்கும் மனசுகிடந்து ஏங்கும். அந்த ஓவியங்களின் ஈர்ப்பு தான் சுஜாதா என்கிற கதைசொல்லிமேல் கிறுக்குப்பிடிக்க வைத்தது.
அதன் பிறகு வேலைகிடைத்து தொழிற்சங்கம் அறிமுகமாகி தோழர் பீகே பின்னால் ஆட்டுக்குட்டி போல அலைந்தோம். அவர்தான் எனக்கு மாதுவை அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் கூடக்காடுமேடெல்லாம் அலைந்து இடது ருசியறிந்தோம்.நாங்கள் மூன்று பேரும் போட்டி போட்டு புத்தகங்கள் படித்தோம் அது பற்றிப்பேசினோம்.அந்தக்காலமும் அப்படி தோழமயும் நட்பும் கிடைத்தால் பொன்னுலகம் தனியே தேவையிருக்காது.1985 முதல் 1990 வரை கணக்கிலடங்கா புத்தகங்களைப்படித்தேன் அதில் நான்கு புத்தகங்களின் பெயரைச்சொல்லியே தீரவேண்டும். கடல்புறத்தில்,நினைவுகள் அழிவதில்லை,மோகமுள்,பன்கர்வாடி என நான்கும் முக்கியமானவை.
இதைவிட உன்னதமான ரஷ்ய நாவல்கள் இருந்தாலும் இந்த இந்திய நிலப்பரப்பை நான்கு கோணங்களில் அனுகிய புத்தகங்கள் அவை. அந்த அனுகுமுறை வாசகனை அலைக்கழித்து ஆட்டுவிக்கும். ஒரே காரணம். சமூகக்கட்டுமானம் பவித்திரம் போன்ற எழுத்து போன்ற இட்டுக்கட்டிய படிமங்களை உடைத்துக்கொண்டு நமது அன்றாடங்களில் இருந்து எழுந்து வரும் சாமன்ய மனிதர்களை நாயகர்களாக்கும் புதினங்கள் இவை.
பிலோமிக்குட்டி,சாமிதாஸ்,பவுலுப்பாட்டா,ரஞ்சி என்கிற மனிதர்களின் சம்பாஷனைகளும்,அவர்களின் மௌனங்களும் அதைப்பிரதிபலிக்கிற அலைச்சத்தமும் வாசகனின் அந்திமக்காலங்கள் வரை கேட்டுக்கொண்டே இருக்கும். வாசகனின் கையில் தூரிகையைக்கொடுத்து அவர்களுக்கெல்லாம் முகம் செய்யக்கொடுப்பார் வண்ணநிலவன். அவரது முகத்தை மட்டும் மொத்தமாக மறைத்துக்கொள்வார். 2009 ஆம் ஆண்டுதான் அவரது புகைப்படத்தை வலையில் தேடிப்பிடித்தேன்.
தஞ்சையை நெல் வயல்களை மர ஊஞ்சலை பட்டுப்பாவாடை உடுத்திய யுவதியை வெள்ளை வெத்திலையை,சீவலை கர்நாடக சங்கீதத்தை,காய்ச்சல் நேரத்தில் சூடகும் நினைவுகள் எல்லாம் உரசிச்செல்லும் அந்த மோகமுள்ளின் தடித்த பக்கங்களை.நிறைவேறாத ஆசையோடு தாமரைக்குளத்தில் மிதந்த பிம்பமும் காலங்கடந்தும் பாபுவோடு கூடிக்கிடக்கும் பிம்பமும் காலத்தால் அழியாத ஓவியங்கள். அவை இலக்கணக்கோடுகளை உருவி உதறி எதார்த்தம் எழுதிய தைல ஓவியங்கள். அந்த தி.ஜா எனும் செழித்த பூமியிலிருந்து விளைந்ததுதான் சுஜாதாவின்,பாலகுமாரனின் எழுத்துக்கள் என்பதை யாரும் சடுதியில் இனம் கண்டுகொள்ளலாம். உலகில் எதுவும் சுயம்பு இல்லை.எழுத்தில் எப்படி இருக்க முடியும்.
அப்படித்தான் ருஷ்ய இலக்கியங்களிலும்,எளிய மக்களின் எதார்த்தவாழ்வின் அழகில் வறுமையில் கோபங்களில் இருந்தும் கதைகள் எடுத்து எழுத வந்தது முற்போக்கு முகாம்.அதைப்பாரதியில் இருந்து ஆரம்பிப்பதா இல்லை கிராவில் இருந்து ஆரம்பிப்பதா என்கிற பட்டியல் நீளமாய்க் கிடக்கிறது.அதுகிடக்கட்டும். என் அருகில் இருந்து எழுதிய மேலாண்மைபொன்னுச்சாமி, ஷாஜஹான், தமிழ்ச் செல்வன், கோணங்கி, உதயஷங்கர், ஆதவன்தீட்சண்யா,மாதவராஜ் ஆகியோர் தோளில்கைபோட்டபடி இலக்கிய பரிச்சயமும் எழுத்தார்வமும் கொடுத்தவர்கள். ஒரு உண்ணாவிரதத்தில் பங்கேற்ற மாதுவை போலீஸ் பிடித்துக்கொண்டு போய் சாத்தூர் அரசு மருத்துமனையில் படுக்க வைத்தது. நீர்ச்சத்து குறைந்திருந்த அவனுக்கு குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருந்தது.ஒரு இரவும் ஒரு பகலும் நான்தான் அருகில் உட்கார்ந்திருந்தேன்.
நோயாளிகளின் முனகலோடும்,மூத்திர நெடிகலந்த பினாயில் நெடியோடும் நான் விழித்திருந்தேன்.என்னோடு கூட நிரஞ்சனாவின் " நினைவுகள் அழிவதில்லை "புத்தகமும் விழித்திருந்தது. எல்லா நடு இரவுகளிலும்,எல்லா மருத்துவமனைக்காத்திருப்புகளிலும் மின்னலடித்துவிட்டுப்போகும் அந்த
அப்புவின் சிறுகண்டனின் நினைவுகள்.
11 comments:
புத்தகம் ஒரு சிறந்த தோழன். வாசித்தல் ஒரு நல்ல வழிகாட்டி.. இல்லயா காமு சார் :)
Nice sharing. Thanks.
இன்னும் படிக்காத புத்தகங்கள் எவ்வளவு இருக்கு.. எப்ப நேரம் கிடைக்கும்.
நினைவுகள் அழிவதில்லை எல்லோருக்கும் ஞாபகமிருக்கும் நாவல்.
எழுத்தாளர் தனுஷ்கோடிராமசாமி உங்கள் ஆசிரியரா , அதான் இவ்வளவு நல்லா எழுதக் காரணமா
Good information
Thanks for sharing
Thanks
Joseph
Job Opportunity: Need candidates with good English knowledge and basic computer knowledge with any degree.
Contact: Kannan: 94435-87282
Work Location: Kanyakumari Dist.
காமராஜ் அவர்களே! அற்பு தமான இடுகை".நினைவுகள் அழிவதில்லை" நாவலை வெல்லூர் தோழர்கள் தஞ்சையில் (1978 என்று நினைவு)நாடகமாகபோட்டார்கள்.அரசு ஊழியர் சங்க தலைவர் கங்காதரன் அதில மாஸ்டராக நடிப்பார். அருமையான அனுபவம். கன்னட எழுத்தாளர் "நிரஞ்சனா" எழுதியது. மறைந்த பி.ஆர்.பரமேஸ்வரன் தமிழில் தந்தார்.மறக்க முடியாத,மறக்கக் கூடாத நாவல்.நிரஞ்சனா 'சிராஸ்மறணே" என்று குரறிப்பிட்டார். பி.ஆர் பி "நினைவுகள் அழிவதில்லை" என்று தலைப்பிட்டார். கையுர் தியாகிகளான நவலின் நாயகர்கள் முண்று பேரை பிடித்து துக்கிலிடார்கள். மாஸ்டர் என்ற நான்காமவரைபிடிக்க முடியவில்லை தலைமறைவாகிவிட்டார். கெரளத்தின் முதலமைச்சராக இருந்த மறைந்த ஈ.கே.நாயனார் தான் அந்த மாஸ்டர். இந்த நாவலை லெனின் ராஜேந்திரன் "மீன மாசத்திண்ட சூரியன்" என்று படமாகத்தந்தார். ---காஸ்யபன்
அருமையான நினைவுகள்
வாசிப்பு என்பது ஆசிரியர், நண்பர், பெற்றோர் மற்றும் மனைவி, ஆனால் எந்த சூழ்நிலையிலும் சங்கடம் விளைவிக்காத தோழமை. உணர்ந்தால் பொக்கிஷம். இல்லாவிட்டால் வெறும் நினைவுகள்.
புத்தகம் படிக்கிறது சரியான வயசுல வந்து உக்காரணும். பெரிய கொடுப்பினை அது:).
அப்படியே, பொங்கிப் பொங்கி பேசுவது போல ஒரு எழுத்து.
காமு, லவ் யூ
Nice blog you havve
Post a Comment