அவன் நல்ல உழைப்பாளி.எப்படின்னா ஒரு வண்டி பாரத்தையும் ஒத்தாளா ஏத்தி,கொச்சக்கயிறு போட்டு இறுக்கி பத்திக்கொண்டுவந்து வீடு சேத்துரு வான்.மாடு ஒழவுக்கு போயிருச்சின்னா அசரமாட்டான். ரெண்டு ரெண்டு கெட்டா கெட்டி தலச்சுமையாகவே கொண்டுவந்து இறக்கிவிடும் ஒன்மேன் ஆர்மி.உழவடிக்க,பாத்திகட்ட,தண்ணீ பாய்ச்ச, களையெடுக்க, உரம்போட, மருந்தடிக்க கதிரறுக்க எல்லாவேலைகளையும் செய்யக்கற்றுக் கொண்ட மாஸ்டர்ஆப் ஆல் சப்ஜெக்ட்ஸ்.
ஒண்ணரக்குறுக்கம் மொளகாச் செடியில் எந்தச்செடியில் எத்தனை காய் தொங்குகிறதென்பதை கேட்டால் துல்லியமாகச் சொல்லிவிடும் மனுசக் கம்ப்யூட்டர்.ஒரு கரட்டாண்டி பிஞ்சைக்குள்ள நுழஞ்சாலும் கண்டுபிடிக்கிற மொப்ப சக்திபடைத்தவன். ஒரு விவசாயி அப்படி இருந்தால் தான் வளத்து அறுத்து வீடுகொண்டுவந்து சேக்கமுடியும்.அப்படிப்பட்டவன் தான் நாரணசாமி. அவனுக்குத் தேவையெல்லாம் ஒருசட்டிக்கஞ்சி.ஒரு டவுசரும் தலத்துண்டும், ஒருகட்டுப்பீடி போதும்.
இப்படி இருவத்திநாலு மணிநேரமும் தோட்டமே கதியிண்ணு கெடக்குற கருக்கான பிள்ளைக்கு ஒரே ஒரு கிறுக்கு இருந்திச்சு.அது எம்ஜிஆரு.அவர் கதை கேட்பதும் அவர் பாட்டுப் பாடுவதும்,அவரோடு சேர்ந்து கனவு காண் பதுவும் தான் அவனது பொழுது போக்கு.அப்படி இருந்துவிட்டால் கூட பரவாயில்லை.ஒரு நாள் நெற பிஞ்சையில ஆளுயர சோளநாத்துகுள்ள புகுந்து மேட்டுப்பட்டிகாரன் களவாண்டுகொண்டிருந்தான்.அரவம் கேட்ட நாரணசமி ஓடிப்போய் மக்காடச் சேத்துப் பிடிச்சிக்கிட்டான்.ஒரு வப்பு வச்சி அவன முகத்த திருப்பி பாத்தான்.அப்படியே அடிக்கிற சோலிய விட்டுப்பிட்டு ’என்னண்ணே நீங்களே இப்படிச்செய்யலாமா’ என்று கேட்டான்.வந்தவனுக்கு பேயடிச்சமாதிரி ஆகிப்போச்சு.அடிச்சு காலக் கையக் கட்டி ஊர்க் கூட்டத்துல நிக்க வச்சுருவானேன்னு பயந்தா அண்ணம்மொற கொண்டாடுறானேன்னு தெகச்சுப்போயிட்டான். வேற ஒண்ணும் இல்ல களவாங்க வந்தவன் எம்ஜிஆரு படம்போட்ட பனியன் போட்டிருந்தான். எம்ஜிஆரும் எம்ஜியாரச்சேந்த எல்லாரும் நல்லவங்களாம்.அவருதானே திருடாதே பாப்பா திருடாதேன்னு பாட்டுப்படிச்சாரு.
ஊர்ல பொன்னுச்சாமி பொன்னுச்சமி ன்னு ஒருகதைசொல்லி இருந்தான். அவன் சொல்லுகிற சினிமா கதைகள்,கைதேர்ந்த டைரக்டரின் கதைகளை விடவும் அழகாக இருக்கும். இருக்காதா பின்ன.அவனே எம்ஜியார் டயாலாக், சரோஜாதேவி டயாலாக்,நம்பியார் டயாலாக் பேசனும். பாட்டுகளை படிக்கணும். பின்னணி இசையில்லாமல் சோகத்தைக் கொண்டு வரணும்.கடலைமிட்டாய்,முறுக்கு, பட்டர் பன் இல்லாமல் இடைவேளை வேற உடணும்.அந்தப் பொன்னுச்சாமிக்கு துட்டுத் தட்டுப்பாடு வந்தாப்போதும் நேரே நாரணசாமி பிஞ்சைக்கு வந்துவிடுவான்.ஒரு எம்ஜியார் படத்தை விறு விறுண்ணு சொல்லிவிட்டு கொஞ்சம் செலவுக்கு துட்டுவாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்துவிடுவான்.
அந்தக்காலத்தில் வருசத்துக்கு ஒரு எம்ஜியார் படம் வரும். அதுவும் மெட்ராஸ் மதுரையெனப் பெரு நகரங்களில் ஓடி நஞ்சி போய் சாத்தூர் வந்துசேர ஒண்ணரை வருசமாகும். போன்னுச்சாமிக்கு துட்டுத் தேவையாயிருக்கும் போதெல்லாம் கதை சொல்லனும்ணா புது புது கதை சொல்லணும். அதனாலே முத்துராமன்,ஜெய்சங்கர் படத்தையெல்லாம் எம்ஜியார் சரோஜாதேவி பேரப்போட்டு ஓட்டிவிடுவான். ஏண்ணா நாரண சாமி மொத்தத்துல ரெண்டு படம்தான் பாத்துருக்கான் பெரிய இடத்துப் பெண்ணும் நீதிக்குப்பின் பாசமும்.அதனாலேயே எம்ஜிஆரும் சரோஜாதேவியும் நெஜமாவே புருசம்பொண்டாட்டி என்கிற எண்ணம் புளியமரத்து வேர்போல அவனுக்கு உள்ளே எறங்கிருச்சு.கிராமங்கள் அப்போது அப்படித்தான் இருந்தது.
எம்ஜியார் சாவித்திரி,சிவாஜி பத்மினி,ஜெய்சங்கர் ஜெய்சித்ரா,டிஎம்மெஸ் சுசீலா எல்லாம் நிஜஜோடிகள் என்கிற கற்பிதம்.
இந்த பொன்னுச்சாமி வேற ஊர்ல இல்ல. வேலவெட்டியில்லாம கஷ்டப்பட்டு வயித்தக்கழுவ வெளியூர் வேலைக்குப்போய்விட்டான்.போனவன் எப்பவாச்சும் ரெண்டு மாசத்துக்கொருதரம் வருவதும்,அவன் குடும்பத்தோடு காலம்கழிப்பது திரும்பிப்போவதுவுமாக இருந்தான்.நார்ணசாமிக்கு சினிமா வெறி தலைக்கேறிப்போனது.எம்ஜிஆர் படம் வந்துருச்சா வந்துருச்சா எனக்கேட்டுக்கொண்டலைந்தான்.ஒரு நாள் தனலெச்சுமித்தேட்டரில் எம்ஜிஆர் படம் என்று சொன்னதும்.சண்டை பிடிச்சி பிஞ்சையப்பாக்க ஆள் மாத்தி வுட்டுட்டு பகலாட்டம் பாக்கப்போனான். போயிட்டுவந்து ரெண்டு நாளா ஒரே பொலம்பல்.
'அவரே இப்படிச்செஞ்சா எப்பிடி' என்றான்.
'எப்பிடி' என்றார்கள்
'ஊராம்பொண்டாட்டியக் கையப்பிடிச்சி இழுக்கலாமா ?'
கேட்டவனுக்கு தூக்கிவாரிப்போட்டுவிட்டது.
’இதென்ன கூத்து இந்த வாரம் ஊர்ப் பஞ்சாயத்து தானா, யாரப்பா அது’
’அந்தாளுதா எம்ஜியாரு’
‘என்னா செஞ்சாரு, அவரு யாருகையப்பிடிச்சி இழுத்தாரு’
‘ஜெமினிக்கணேசம்பொண்டாட்டிய’.
புரிந்து விட்டது ஊர்ச்சனக்களுக்கு.
’அப்ப சர்த்தான் கூப்பிடுங்க எம்ஜியார, இந்த சனிக்கெழம ராத்திரி ஊர்க்கூட்டம்தான்’ என்றார்கள்.
நாரணசாமி வேட்டைக்காரன் படம் பார்த்துவிட்டு பாதியில் எழுந்து வந்தகதை இதுதான்.அதுக்குப்பிறகு எம்ஜியார் படம்பார்ப்பதையே விட்டுவிட்டான்.
14 comments:
அருமை காமு சார்.. இன்னும் கூட அந்த மாதிரி மனுசங்க நம்ம ஊரு பக்கம் இருக்காங்க காமு சார்.. வெள்ளந்தி மனுசங்க..
=)))
வெள்ளந்தியான மனிதர்கள் பல இப்படியுண்டுதான்..
வாசிக்க வைக்கும் எழுத்தும் நடையும்..
அருமை..
மறக்கமுடியாத அப்பாவி மனிதர்கள் காமராஜ்.
இதேபோல ஜெமினி பிக்சர்ஸ் சினிமாவுக்குக் குடித்துவிட்டு படம் தொடங்கியது முதல் முடியும்வரை தூங்கி எழுந்த ஒருவன் கத்தினான்:
”ஏம்ப்பா!படம் பூரா இந்த ரெண்டு பயல்களும் ஊதிக்கிட்டேவா இருந்தாங்க”ன்னு.
வெள்ளந்தி மனிதர்களின் கதைகள் அருமை.
காமரஜ்! சிறு வயதில் "குபேர குசேலா" படம் பார்த்தேன். என் பாட்டியழைத்துச் சென்றார். கிருஷ்ணராக நடித்தவர் ராஜலட்சுமி. கிருஷ்ணர் வரும்பாதெல்லாம் என் பாட்டி கன்னத்தில் போட்டுக் கொள்வார். நாராண சாமி எப்போதும் இருந்து கொண்டு தான் இருப்பார்கள். எழுத்து நடை அருமை---காஸ்யபன்
நன்றி அன்புமிக்க ராமசாமி.
நன்றி பாலாண்ணா
நன்றி அன்புமிக்க பயணமும் எண்ணங்களும்
நன்றி அன்புமிக்க சேதுசார்
நன்றி சுந்தர்ஜீ
நன்றி தோழர்காஷ்யபன்
படிக்க ஸ்வாரஸ்யமாக இருக்கிறது
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆர்.கே.சதீஷ்
ரொம்ப நல்ல இருக்கு
அண்ணா
அன்புடன் கிச்சான்
Post a Comment