ஒரு எட்டுகிலோமீட்டர் தூரத்தை பேருந்தில் போனால் அரைமணி நேரத்தில் கடந்துவிடலாம்.ஆனால் அந்தக்கதையை இரண்டு மணிநேரம் சுவாரஸ்யப்படுத்திச் சொல்லுகிற பலபேர் இருந்தார்கள்.அண்டரெண்டாப் பட்சிகளின் இறக்கைகளை பேருந்துகளின் சக்கரங்கள் பிடுங்கிக்கொள்ளும். ஸ்கைலாப் ராக்கெட் இந்தியாவில் விழப்போகிறது என்ற களேபரம் நடந்துகொண்டிருந்த போது. பம்பு செட்டை வித்து ஒருவாரம் சோறு,கறி பொங்கித் தின்ன குடும்பங்களும், ஆசை ஆசையாய் வளர்த்த ஆடு ,கோழிகளை அடித்துத் தின்ன கதைகளும் நிறைந்தது கிராம வாழ்க்கை.
மேல்நிலைப் பள்ளியில் நுழைந்ததும் என்னை தன் கதைகளால் இழுத்துக்கொண்டு போன வசியக்காரன் எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி. அவர்தான் என் தமிழாசிரியர். அச்சடிக்கப்பட்ட பாடத்திட்டத்திலிருந்து மாணவர்களை வெளியே இழுத்துக் கொண்டுபோய் சுதந்திரம்,பொதுச்சிந்தனை,சமத்துவம்,காதல் என்கிற பெருவெளிக்குள் அலையவிட்டவர் அவர்.அப்போது தான் புத்தகங்களின் வாசம் உக்கிரமாக அடித்தது. லீவுநாட்களில் 'ஆடுமேய்க்கிற மாதிரி அண்ணனுக்கு பொண்ணுப்பார்க்கிற மாதிரி' என்கிற சொலவடையை உண்மையாக்க. அந்தக் கலைச் செல்வியை பார்க்கப் போகிற சாக்கில் நூல்நிலையம் நுழைந்தோம்.அம்புலிமாமா,துப்பறியும் ரிப்கர்பி களைத் தள்ளிவிட்டு சாண்டில்யன் வந்து உட்கார்ந்து கொண்டார்.அதில் வருகிற காதலுக்காக வீரம் வேல் கம்புகளையெல்லாம் படித்துக் கழித்தோம்.
எனது அண்ணன் அந்தோணியும்,எங்கள் ஊரின் முதல் கல்லூரிப்பெண் அன்னபூரணமும் புதிய புதிய புத்தகங்களை அறிமுகப்படுத்தினார்கள்.திரிவேணி சங்கமம் கதையில் வரும் ஜேனட்டை நான் பூஜிக்க ஆரம்பித்தேன்.அதற்கு காரணம் சுஜாதாவின் எழுத்தா ஓவியர் ஜெயராஜின் ஓவியமா என்று பட்டிமன்றம் வைக்க வேண்டியதில்லை ரெண்டு கலைஞர்களின் சின்க்ரனைஸ் மட்டுமே காரணம்.ஜேனட்டின் சாயலில் பின்னால் வந்த அவள் அப்படித்தான் ஸ்ரீ்பிரியாவையும் பூஜிக்கத் துவங்கினேன். நூறு பக்கங்களுக்கு மேலிருக்கும் நாவல் படிக்க வேண்டி சாண் டில்யனுக்காக அலைந்த காலத்தில் அவர் கிடைக்காமல் 'போரே நீபோ' என்கிற ரஷ்ய நாவல் படிக்க நேர்ந்தது, அதைச் சொன்னபோது அப்படியா நீ ஜெயகாந்தனைப் படி என்று சொன்னார்கள்.சிலநேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நடகம் பாக்கிறாள் இரண்டையும் அடியும் துடியுமாகப் படித்தேன்.
பாண்டுகுடியில் வேலைக்குப் போனதும் என்னைச் சுற்றியிருந்த ஊரும் நண்பர்களும் தூரமானார்கள். அவர்கள் இல்லாத வெற்றிடத்தை கனவுகளாலும் புத்தகங்களாலும் கழித்தேன்.ஜெயகாந்தனின் தொடர்கதைகள் கிடைக்கிற வாரப்புத்தகங்கள்,பாலகுமாரன் சுஜாதாவின் வாரப்புத்தகங்கள் தராசின் ரெண்டு பக்கமாக மேலும் கீழும் ஆடிக்கொண்டிருந்தது.
ஆத்மாநாம் ஜெயித்து விட்டான்.ஆத்மாநாமைப்போல பல தீவிரக் கதைகளோடு என்னை நெருங்கி வந்த 'மகஇக' தோழர்கள் கொடுத்த புத்தகங்கள்,பாலச்சந்தரின் கமலஹாசன்,கண்சிவந்தால் மண்சிவக்கும் சினிமா,இலங்கைத்தமிழ் பிரச்சினை என என்னையறியாமலே இடதுபக்கம் திருப்பியது.
அப்போது பீகே என்கிற கிருஷ்ணகுமார் பாண்டுகுடியில் நான் தங்கியிருந்த அறைக்கு வந்தார்.பாண்டியன் கிராமவங்கி ஊழியர் சங்கத்தில் உறுப்பினராக்க வந்த அவர் நான் படித்த புத்தகங்களை பட்டியலிடச் சொன்னார்.சில முன்னெச்சரிக்கை காரணங்களுக்காக தீவிர புத்தகங்களின் பெயரை ஒழித்து வைத்துக்கொண்டு பாலகுமரனையும் சுஜாதாவையும் சொன்னேன்.வாசிக்கும் பழக்கம் குறித்த ஒரு சீனப் பழமொழியைச் சொன்னார்,அவர் சில புத்தகங்களைத் தெரியுமா எனக்கேட்டார் தெரியாதெனச்சொன்னேன். சங்க வேலைக்கு ஆவான் என்று என்னைச் சாத்தூருக்கு மாற்றலாக்கி அழைத்து வந்தார். என்னைச் சாத்தூருக்கு அழைத்து வந்ததில் அவருக்கு உள்நோக்கம் இருந்ததா.இருந்தது. சாத்தூர் எனக்கு ¨வைப்பாறு, வெயில், சங்கம்,தோழர்கள், எல்லாவற்றையும் விட அரிதான புத்தகங்கள் புத்தகங்களையும் விட உன்னதமான நட்பை எனக்கு அறிமுகப்படுத்தியது.
14 comments:
அருமை
கதைகளும் பேச்சுக்களும் வாசிப்பும் தானே மனதை பதப் படுத்துகின்றன.
அற்புதமான பதிவு, இப்படி எல்லாம் நமக்கு அடுத்து வரும் தலைமுறையினரால் கதை கேட்க முடியுமா என்ன, இந்த கதைகள் நமக்குள் எவ்வளவு மகிழ்ச்சியையும் கற்பனையையும் ஏற்படுத்தி இருக்கும். கடைசி இரண்டு பதிவுகளையும் படித்தேன், நீங்களும் நல்ல கதை சொல்லி தான் என்று எனக்கு தோன்றுகிறது.
அற்புதமான பதிவு, இப்படி எல்லாம் நமக்கு அடுத்து வரும் தலைமுறையினரால் கதை கேட்க முடியுமா என்ன, இந்த கதைகள் நமக்குள் எவ்வளவு மகிழ்ச்சியையும் கற்பனையையும் ஏற்படுத்தி இருக்கும். கடைசி இரண்டு பதிவுகளையும் படித்தேன், நீங்களும் நல்ல கதை சொல்லி தான் என்று எனக்கு தோன்றுகிறது.
தணுஷ்கோடி ராமசாமி உங்களுக்கு வாத்தியாரா? கொடுத்து வச்சவருங்க நீங்க.
அவரோட 'தோழர்' என்னை மாற்றி அமைத்த நாவல். இப்போதும் நேரம் கிடைக்கும்போது அவரது தொகுப்பை படித்துக்கொண்டிருக்கிறேன்.
ஓ நீங்கள்லாம் பாண்டியன் கிராம வங்கியா? அப்ப நெல்லைகுரலோன் தெரியுமா தோழர்?
/ஜெயகாந்தனின் தொடர்கதைகள் கிடைக்கிற வாரப்புத்தகங்கள்,பாலகுமாரன் சுஜாதாவின் வாரப்புத்தகங்கள் தராசின் ரெண்டு பக்கமாக மேலும் கீழும் ஆடிக்கொண்டிருந்தது/
எனக்கும் கூட!!! பகிர்தல் தரும் சந்தோஷத்தை விடவும் ஒத்த விஷயங்கள் பகிர்தல் தரும் ஆனந்தம் அதிகம்!
வாருங்கள் ராம்ஜி.
நன்றி.
உங்கள் முதல்வருகைக்கு நன்றி இனியாள்.
நெல்லைச் சீமையிலிருந்து நிறைய்ய புது
பதிவர்கள் வருவது ரொம்ப ஆனந்தமாய் இருக்கிறது.
ஆமாம் தோழா அவர் ஆசிரியர், பிறகு தோழர்,இப்போது குடும்ப நண்பர் எப்போதும் எங்கள் ப்ரிய அண்ணா.
நன்றி அருணா.
ரசிக்கும் படியான எழுத்து நடை நான் ரெண்டு முறை படித்தேன்...அருமை...
மீண்டும் முதல் இடுகையும்,இரண்டாவது இடுகையும் வாசித்தேன் மக்கா.
நான்தான் அய்யா நீர்!
சீமான்கனி வணக்கம்.
உங்களது வார்த்தைகள் உற்சாகம்
தருகிறது நன்றி.
வாங்க மக்கா,
எனக்கு பிரமாதமான பரிசு இது.
அன்பு காமராஜ்,
எது படிக்கக்கிடைத்தது என்ற உங்களின் இந்த கதை, என்னென்ன படித்தீர்கள் என்ற பட்டியலில் சொல்லாமல் நிரம்பி வழிகிறது, நீங்கள் வாழ்க்கையை படித்த திறந்த ரகசியங்கள். எப்படி காமராஜ் இப்படி ஒரு தீவிரம், போகிற போக்கில் உங்கள் வாத்தியார், தனுஷ்கோடி ராமசாமி பற்றிய உங்கள் கருத்தில் ஆரம்பித்திருக்கலாம் வாழ்க்கையின் அடிச்சுவடி நீங்கள் தேடி அடுக்கி படிக்க ஆரம்பித்தது... வாசிப்பு கண்ணில் ஆரம்பித்து உங்களுக்கு மனசு முழுக்க அப்பிக்கொண்டிருக்கிறது காமராஜ்...
நான் என்ன வாசித்து கிழித்தேன் என்று தோன்றுகிறது... தீபாவிற்கான மிகப்பெரிய அங்கீகாரம் இந்த தொடர்பதிவு. இப்படி எழுத விரல்களையும் மனசையும் சுடுமணலில் புரட்டி எடுக்கிறேன் பண்பட...
அன்புடன்
ராகவன்
Post a Comment