அவன் முகத்தை மைகொண்டு வரைந்த மீசை மறைத்திருந்தது. நெற்றியில் ஒரு பொட்டும் கூட வைத்திருந்தான்.கையில் ஒரு சின்ன டோ லக் வாத்தியம்.தோளில் ஒரு தொங்குபை. அவனுக்கு வயது பத்துக்கூட இருக்காது.
ஜெய்ப்பூர்- கோவை துரித ரயிலின் எட்டாவது பெட்டியின் கழிப்பறைப் பக்கத்தில் உட்கார்ந்தான்.காலைக் கையை நீட்டி சோம்பல் முறித்துக் கொண்டான்.தோளில் கிடந்த பையைத் திறந்து ரூபாய்த் தாள்களை அடுக்கினான்,சில்லரைகளை எண்ணினான்.
ரயில்வே காண்டீனில் டீ விற்கிறவர் வந்தார்.டீ பாத்திரத்தை அவனருகில் வைத்துவிட்டு கூடவே உட்காந்தார்.இருவரும் பரஸ்பரம் பேசிக் கொண்டார்கள் ஒரு டீக்கான காசை எடுத்துக் கொடுத்துவிட்டு டீயை வாங்கி நிதானமாக மிக நிதானமாக குடித்தான்.டீயைப் பக்கத்தில் வைத்துவிட்டு ரூபாய் நோட்டுகளை ஒரு சுருக்குப்பையில் திணித்து அதை இடுப்பில், அரைஞான் கயிற்றோடு சேர்த்து இறுகக் கட்டிவைத்தான். பயணச்சீட்டு பரிசோதகரும் வந்து அவனிடம் எதோ பேசிவிட்டுப்போனார்.
அவனை விட வயது குறைந்த பெண்குழந்தை ஒன்று ஏழாவது பெட்டியிலிருந்து அவனை நெருங்கி வந்தாள்.அவனது தங்கையே தான்.அவள் கையில் ஒரு எவர்சில்வர் தட்டு இருக்கிறது அதில் சில ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் நாணயங்கள் கிடந்தது. அவனது முகத்து நேரே அவள் நீட்டினாள். அவன் அதில் கிடந்த காசுகளை அளந்தான். அவள் அருகே வைக்கப்பட்டிருந்த தேநீர்க் குவளையை அளந்தாள்.இன்னும் அதிகம் வேண்டும் என்பது போல முகபாவனை மாற்றி அவளை எட்டவது பெட்டிக்குள் அனுப்பிவைத்தான். அப்போது பயணிகள் பகுதியிலிருந்து ஒரு குழந்தை ஓடி வந்தது. பின்னாலேயே அதன் தாயும் வந்தாள். குழந்தையை கை நீட்டி மறித்து,அதன் தாய்க்கு ஒரு அறிவுறை சொன்னான்.
காய்கறி சாலட் விற்கிற இன்னொரு பதினான்கு வயதுக்காரன் வந்தான். அப்போது மதியம் மணி ஒண்ணேகால் இருக்கும்.தேநீர் அவனது பசியை அடக்கவில்லை போலும்.அதையும் வாங்கினான்.சம்மணமிட்டு உட்கார்ந்து உணவுக்கு கொடுக்கிற மரியாதையோடு அதை ஒவ்வொரு துணுக்காக எடுத்து தின்றான்.மறுபடியும் அவன் தங்கை வந்தாள். இப்போதும் கூட சில்லறைத் தட்டை அவன் முன் நீட்டி விட்டு,வெள்ளரி துணுக்குகளால் எச்சில் ஊறினாள். விரட்டி விட்டு நிதானமாக சாப்பிட்டான்.அவள் தட்டை முன்னாள் நீட்டிக்கொண்டு தலையைப்பின்னால் திருப்பிக்கொண்டே நடந்தாள்.
அவன் முன்னாலிருந்த பாத்திரத்தில் கிடந்த பதார்த்தம் காலியாக,காலியாக விரட்டப்பட்ட பெண்குழந்தையின்
பசி ஏக்கம் நம்மைத் தொற்றிக்கொள்ள, நமக்கு அவன் மேல் வெறியேறியது.உலகம் இவ்வளவு கொடூரமானதாக இருக்கக்கூடாது.ரயிலின் ஓசை அபசுரமாக ஒலித்துக் கொண்டே நிமிட நிமிடமாக நகர்ந்தது.எனக்கு முள்ளும் மலரும் ஷோபாவும்,ரஜினியும் நினைவுக்கு வந்தார்கள்.அப்படியில்லையே இந்தச்சிறுவன் இதென்ன கொடுமை
என்று நெஞ்சு பதறியது. நான் சாதாரண மனிதனல்ல எனக்கு எல்லோரையும் விடக்கூடுதலாக மனிதாபிமானமிருக்கிறது என்னும் கர்வம் வேலையைக்காட்ட ஆரம்பித்தது. தட்டு பதிக்குமேல் காலியாகிவிட்டிருந்தது.நான் எழுந்தேன், அவனும் எழுந்தான் ஒவ்வொன்றாக எடுத்து தோளில் போட்டுக்கொண்டான் மீதியிருந்த பேப்பர் தட்டோ டு பதார்த்தத்தைச் சுருட்டிக்கொண்டான்.அங்கிருந்து மறைந்தான்.
சற்று தாமதத்தில் எட்டாவது பெட்டிக்கும் ஒண்பதாவது பெட்டிக்கும் நடுவில் அந்தப் பெண் குழந்தை அதே
போலச் சம்மணமிட்டு உட்கார்ந்திருந்தது.அவன் ஒண்பதாவது பெட்டியில் தட்டேந்திக் கொண்டிருந்தான்.
ஏ...ஞ் செல்லம்,
ஏ...ந் தங்கம் என்றும்
அடச்சீக்..கழுத என்றும்
அவரவர்க்கான
மொழியிருக்கிறது
அன்பு காட்ட.
ஒன்று போலல்ல இன்னொன்று. வாழ்க்கை அதனதன் இயல்பிலே போய்க்கொண்டிருக்கும்.
13 comments:
அருமையான உட்கருத்து.. மிக ரசித்தேன்..
ரசித்தேன்
நிறையா பேசுகிறது பத்திகள். அருமைங்க.
/ஒன்று போலல்ல இன்னொன்று. வாழ்க்கை அதனதன் இயல்பிலே போய்க்கொண்டிருக்கும்./
ஒன்றைப் போல் மற்றொன்று இருக்கவேண்டும் எதிர்பார்ப்பில்தானே ஏமாற்றங்கள் வழிந்தோடுகிறது...அதனதன் இயல்பிலே ஏற்றுக்கொண்டால் வாழ்க்கை அழகானது!
வாங்க வாங்க சிவாஜி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சிவசங்கர் உங்களின் முதல்வருகைக்கு
மகிழ்ச்சி.
நன்றி வித்யா.
நன்றி அருணா மேடம்.
சரியாய் சொன்னீங்க
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பத்மா.
நல்ல பகிர்வு
நெஞ்சை கணக்கச் செய்தது இறுதிவரை.
samukathin mithu ullartha anbudan irukum ungal pathivu arumai
Post a Comment