7.3.10
சிறுகதை வாங்கப்போய் சிநேகம் வாங்கி வந்தேன். எழுத்தாளர் பா.ராமச்சந்திரன் நினைவுக்கு.
தேனருவி, மனித சஞ்சாரமும் வாகனப் புகையும் நீக்கப்பட்ட சாலை வழியே சருகுகளை மிதித்துக்கொண்டு மேலேறும்.வானுயர்ந்து அடர்ந்த மரங்களில் இருந்து பறவைகள் புதுவரவை உற்றுக் கவனிக்கும் பயணம். அரசுக்குச் சொந்தமான அந்த விருந்தினர் மாளிகையில் சிறுகதைப் பட்டறை.வாத்தியார்களாக எங்கள் எஸ்.ஏ.பி,மேலாண்மை பொன்னுசமி,காஸ்யபன்,கந்தர்வன்,தமிழ்ச்செல்வன்,முத்துநிலவன். மாணவர்களாக ஒரு பெரும் பட்டாளம். எனக்கு அப்போது எதுவும் எழுதுவதில் நாட்டமில்லாமல் இருந்தது.மேடைப்பேச்சு,கவிதை,வையத் தலைமை ஏதும் எனக்குச் சுட்டுப் போட்டாலும் வராது எனத் தெரிந்த சாத்தூர் தமுஎச எப்படியாது பொளைச்சுப்போ என்று என்னை குற்றாலம் சிறுகதைப் பட்டறைக்கு அனுப்பியிருக்க வேண்டும்.அல்லது யாரவது கடைசி நேரத்தில் வரமுடியாமல் போனதால் என்னை பதிலியாகக்கூட அனுப்பியிருக்கலாம்.காற்று வாங்கப்போய் கவிதை வாங்கி வருவதில்லையா.அது போல நான் சிறுகதை வாங்கப்போய் சிநேகம் வாங்கி வந்தேன்.
தலைவர்களோடு சிலர் உரசிக்கொண்டு போனார்கள். எங்களுக்கு தெரியாத புத்தகங்களையும் எழுத்தாளர்களையும் சொல்லிச் சிலாகிக்க அதில் ஒட்டாமல் தனிமைப்பட்டுப் போய் நின்றேன். எல்லா இடத்திலும் எனக்காக கடைசிப் பெஞ்சு காத்திருக்கும். அங்குபோய் தயங்கித் தயங்கி உட்கார்ந்தேன். அங்குதான் இப்போதைய தமுஎச தென் சென்னைச் செயலாளர் தோழர் சைதை ஜெ,கவிஞன் நாவே அருள்,மீனா,மு.முருகேஷ்,மூர்த்தி ஆகியோரோடு அவனைப் பார்த்தேன்.நாலறை அடி இருப்பான்.கொழு கொழுவென்று,நல்ல சிகப்பு நிறம். சென்னைத் துறை முகத்தில் கண்டெடுத்து தமுஎச குற்றாலத்துக்கு அனுப்பியிருந்தது. புகையைவிட்டு நெரிசலை விட்டு குற்றாலத்தில் மூன்று நாள்தங்க வந்திருந்த அவன் அங்கு கிடக்கிற புல்பூண்டு எல்லாவற்றையும் அதிசயமாகப் பார்த்தான். எங்களோடு சேர்ந்து புகைப்பிடித்து ஒத்துவராமல் இருமினான்.அருவிக் கரையின் ஓரத்தில் உட்கார்ந்து அள்ளிக் குளித்தான் நானும் ஜேவும் அருளும் கை கொட்டிச் சிரித்தோம்.ஒதுங்கி அவரவர் படித்த புத்தகங்களைப் பட்டியலிட்டோ ம். யாரும் குமுதம் ஆனந்த விகடனைத் தாண்டி வரவில்லை.
ஒன்றாய் எழுந்து,ஒன்றாய் நடந்து,காத்திருந்து சாப்பிட்டு வாலிபக் காலத்தில் எங்கள் பள்ளிக்கூட நினைவுகளை மீட்டெடுத்தோம் புரிதலோடு.ஒரு காலை நேரம் தோழர் எஸ் ஏபி யோசனையில் எழுமிச்சை டீ தயாரானது.அவன் குடிக்கவே இல்லை.தோழர் காஸ்யபன் வகுப்பெடுத்தால் ஒரே கும்மாளமாகி விடும்.உடனடி சிறுகதை,அதற்குப்பரீட்சை,மார்க் இப்படி.நாங்கள் நால்வரும் பெயிலாகி இருந்தோம்.நாங்கள் சாராக அறிமுகமாகி,தோழராகத் தொடர்ந்து டே காமு என்று கூப்பிடும் நெருக்கமானோம். செல்போன் இல்லாத அந்த காலத்தில் சென்னையில் இருந்து ஒரு முறை ட்ரங் கால் போட்டுக் கூப்பிட்டான்.பின்னர் நடந்த தமுஎச மாநாடுகளில் அவன் என்னைத் தேடியதும்,சென்னை போனால் நான் அவனைத் தேடுவதுமாக காலம் கடந்தது. இரண்டாயிரத்துக்குப் பிறகு, ஒரு பணிரெண்டாண்டு தாமதத்தில் அவனும் ஒரு சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டிருந்தான்.
'அப்பாவின் பெருவிரல் ரேகை' ஒரு சென்னை மாநகராட்சிப் பள்ளியின் பள்ளிக்கூட நினைவுகளும், ஒரு சென்னை நகரக் கடைக்கோடி நடுத்தரக் குடும்பத்து புழக்கங்களும் நிறைந்த கதையாடல்கள் அப்பாவின் பெருவிரல் ரேகை.அகால மரணமடைந்த தந்தையின் வேலைக்கு வாரிசாகி துறைமுகப்பணிக்குப் போனவன். அலுவலக நெடிக்குள் அடங்கிப்போகாத அவனுக்கு தொழிற்சங்கம்,எழுத்து மிகப்பெரும் விடுதலை தேடித்தந்தது.சென்னை குறும்பட முகாமில் பார்த்து கையைப்பற்றிக்கொண்டான்.தோளில் கைபோட்டான்.குடும்பம் பற்றிக்கேட்டான்.அன்றே வீட்டுக்குப் போய் தனது சிறுகதைப் புத்தகத்தை கொண்டுவந்து சீர் கொடுப்பது போல எனக்குக் கொடுத்தான்.பக்கத்திலிருந்த அவனுக்கு நெருக்கமான தோழர் கேட்டதற்கு மறுத்து 'இது காமுவுக்கு,வேனுமின்னா நீ காசு கொடுத்து வாங்கிக்க' என்று சொன்னான்.
ராஜஸ்தான் போகும்போது நாக்பூர் ரயில் நிலையத்தில் தோழர் காஸ்யபனைப்பார்த்தேன்.அப்போது அவரிடம் நான் இப்படித்தான் அறிமுகமானேன் தோழர் என்னைத் தெரிகிறதா குற்றாலம் சிறுகதை முகாமில் சைதை ஜே நாவே அருள்,பா.ராமாச்சந்திரன் ஆகியோரோடு வந்திருந்தேன் நீங்கள் எனக்கு வாத்தியார் உறவு என்று சொன்னேன்.அவர் பா.ராமச்சந்திரனையும் அவனது எழுத்து பற்றியும் சிலாகித்தார்.அந்த ஐந்து நிமிட சந்திப்பில் நாக்பூர் ஆரஞ்சும்,வாழைப்பழமும் தோழமையுமாக நிரப்பிக் கொடுத்த பை கணத்துக் கிடந்தது. அந்த நேரம் முதல் இன்று வரை மூன்றுநாளுக்கொருதரம் அலைபேசியில் அழைத்துப் பேசும் அவரின் தழுதழுத்த குரலில் கூடுதல் ஈர்ப்பிருந்தது. வளர்த்தால்தான் தந்தையா?.
ராஜஸ்தானிலிருந்து வரும்போது இரண்டு துக்க செய்தியைச் சொன்னார்.ஒன்று தோழர் உரா.வரதராசனின் மரணம்.சடசடவென ஒரு ஆலமரம் ஒடிந்து விறகானதுபோல நொந்து போகும்போதே,தோழன் எழுத்தாளர்.ராமச்சந்திரன் மரணம்..சென்னை வரும்வரையில் நினைக்கிற நேரமெல்லாம் கண்ணீர் பிதுங்கியது.இறந்தது யார் ஒங்க ஒறவா என்று கேட்டுவிட்டு தம்பி அருண் சிரித்தான்.நட்பென்பது அதுக்கும் மேலில்லையா ?
சென்னை வந்து சைதை,ஜே அருள் யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை.வீடு வந்த மறுநாள்.புத்தக அலமாரியை நோண்டும்போது 'என்னடா காமு'. உள்ளிருந்து குரல் கேட்டது.அப்பாவின் பெருவிரல் ரேகை புத்தகத்தை எடுத்தேன்.எனது தோளில் கைவிழுந்தது போலிருந்தது.என் கண்ணீரைப் பார்த்து பயந்து போன அவளுக்கு அவனைச் சொன்னேன்.ரொம்பப் பழக்கமா என்று கேட்டாள்.தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ ?
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
எனது அஞ்சலிகள்.
நெடுநேரம் யாரும் வராது காத்திருக்கும் சாலையோரக் கடைக்கு வந்த முதல் போனி.
பலநேரம் அது கைராசிக்கார மகனாகவோ மகளாகவோ இருக்கும்.
சரக்கு விற்காது போனாலும்.
அன்பு விற்றுப்போகும்.
அன்புக்கு நன்றி அருணா மேடம்.
இந்த இடுகையை வாசித்து முடித்தபோது எனது கண்களிலும் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது.
உள்ளம் கனத்து விட்டது !
நன்றி ஜெயந்தி,
நன்றி சங்கர்.
வருந்த வேண்டாம் அண்ணா. அவர்கள் ஆன்மா சாந்தியடைய என்னுடைய பிராப்த்தனைகள்
நன்றி லாவண்யா.
மாமா இவரைப் பற்றித்தான் சொன்னீர்களா? உங்களது உணர்வு அன்று அருணுக்கு மட்டுமல்ல எனக்கும் தான் புரியவில்லை...சாரி மாமா! கனத்த பதிவு...
எழுத்து எனும் மகாசமுத்திரத்தில் ஓயாத ஓர் அலையாய்...
பாரா என நாங்கள் அன்போடு அழைக்கின்ற தோழர் பா.ராமச்சந்திரன்.
ஒரு இலக்கியவாதியாகவும் கூடவே மிகப்பெரும் துறைமுகத்தின் தொழிற்சங்க செயலாளராகவும் இருந்த மிகப்பெரும் அனுபவம், வாழ்க்கையை எவ்வாறு பார்க்க வேண்டும் என்பதை ராமச்சந்திரனுக்கு கற்றுத் தந்திருந்ததை அவரது எழுத்துக்களில் நன்றாகவே உணர முடியும்.சென்னையின் கடைநிலை உழைப்பாளி மக்கள் சாலையோரங்களிலும் கடைகளின் தாழ்வாரங்களிலும் தமக்கான வாழ்க்கையை சாதாரணமாக அமைத்துக்கொண்டதை ஜெயகாந்தன் தனது கதை மாந்தர்களாக, கதைக்களமாக அமைத்துக்கொண்டதை, ராமச்சந்திரனின் கதைகளைப் படிக்கும்போது ஒருவர் தவிர்க்க முடியாமல் நினைவு கூர முடியும். தான் பணியாற்றிய சென்னை துறைமுகத்தின் தொழிலாளர்களின் வாழ்க்கை அனுபவத்தை மட்டும் இன்றி, தகிக்கும் வெப்பத்தையும் வெறுமையையும் ஏமாற்றத்தையும் மட்டுமே தமக்கான சொத்துக்களாய் தயக்கமேதும் இன்றி தலையில் சுமந்து, ஆனால் நம்பிக்கையோடு திரியும் 'கறுப்பர்களின் நகரம்' ஆன (blackers town) வடபகுதி சென்னைப்பட்டினத்தின் கடற்கரையோர மக்கள், மீனவ மக்கள் தொடர்பான வாழ்க்கையையும் அவர்களது அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளையும் அவர்களது சொந்த மண்ணின் பண்பாட்டு மொழியிலேயே தமது கதைகளில் எழுதி ஆச்சரியப்பட வைத்தவர். 'அப்பாவின் கைப்பெருவிரலில்' விரியும் அவரது படைப்புலகமும் மொழியும் அற்புதமானவை, ஒரு சமுத்திரம் போல கரை காணாதவை.
அவரது நட்பு வட்டாரமும் ஆச்சரியப்பட வைப்பது. மிகப்பெரும் படிப்பாளிகள் ஆளுமைகள் முதல் அன்றாடம் காலையில் மதுவை அருந்திய பின்னரே தொழிலுக்கு செல்லும் கீழ்க்கோடி மனிதர்கள் வரை அவருக்கு நண்பர்களாக இருந்தார்கள். நமக்கு எளிதில் வசப்படாத கதைக்களங்களும் வார்த்தைப்பிரயோகங்களும் அவரது எழுத்தில் மிகச்சாதாரணமாக வெளிப்படும் எனில் நமக்கு வாய்க்காத ஆனால் ராமச்சந்திரனுக்கு மட்டுமே வாய்த்த வித்தியாசமான இந்த அனுபவங்களே காரணம்.
யாரையும் மதிக்கின்ற, எளிமையாகப் பழகும் குணம் அவருக்கானது. ஆனால் அன்பான வார்த்தைகளால் மிகக்கறாரான விமர்சனங்களை தயக்கம் ஏதுமின்றி அவர் எப்போதும் முன்வைத்தார் என்பது இயக்கவாதிகள் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டியது. இதனால் அவரை கசப்பாக பார்த்தவர்களும் இருக்கின்றார்கள், அது குறித்து என்றும் அவர் கவலைப் பட்டதில்லை.
***************
இறுதியாக வெளியான அவரது இரண்டு கதைகள் "நெத்திக்காசு" (புதுவிசை), "பதினாறாம் நாள் நினைவாஞ்சலி" (செம்மலர்) (இக்கதை வேறொரு முடிவோடு உயிரெழுத்திலும் வந்தது) ...தற்செயலாக இவை இரண்டுமே மரணம் தொடர்பான சிறுகதைகளாக அமைந்து விட்டதை இப்போது நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
ஐம்பதே வயதில் பிரிந்து சென்ற ராமச்சந்திரன் வேதனையான ஒரு பாடத்தை நமக்கும் சொல்லிச் சென்றுள்ளார். இலக்கியவாதிகள் தம் உடல் நலன் குறித்தும் கவலைகொள்ள வேண்டும். சுவர் இருந்தால் மட்டுமே சித்திரம்.
****************
வடசென்னை-தென்சென்னை த.மு.எ.கச. இணைந்து கடந்த செவ்வாய் அன்று (9 பிப்ரவரி) சென்னை கேரள சமாஜத்தில் பாராவுக்கு நினைவாஞ்சலி செலுத்தினோம். தோழர்கள் ச.தமிழ்ச்செல்வன், ச.செந்தில்நாதன்,பிரளயன், பா. வீரமணி, பாரதி கிருஷ்ணகுமார், பிரின்ஸ் கஜேந்திரபாபு, அருள், சைதை ஜே உள்ளிட்ட பல தோழர்கள் நெகிழ்ந்து உரையாற்ற பாராவின் மனைவி மக்களுடன் எங்கள் துயரைப் பகிர்ந்து கொண்டோம்.
இக்பால்
Post a Comment