23.3.10

மொட்டைவெயிலைச் சற்று கடத்திவிடும் காற்றைப் போல

உள்ளே இருப்பவர் அநியாயத்துக்கு தாமதப்படுத்துகிறதாகக் கோபம்  வரும்.
காய்ச்சல்காரர் மூடிய போர்வையைத் தாண்டி மாத்திரை வாசமடிக்கும். ரத்தப் பரிசோதனை அறிக்கையை வைத்திருப்பவரின் இதயம் கூடுதலாக துடிக்கும்.தொலைக்காட்சியில் அழுகிற நடிகை  காத்திருக்கிற எல்லோரது சோகத்தையும் சற்று கூட்டி வைப்பாள்.

உள்ளே வருகிற எல்லோரையும் நோயாளியெனச் சந்தேகித்து வெப்பமாணியெடுப்பாள் புதிதாய் வேலைக்கு வந்த தாதிப் பெண். பிரசவ வார்டில்  அழுகிற குழந்தையின் சத்தத்தை ரசிக்கிற தருணம் மறந்து போயிருக்கும்.இங்கேயும் காய்ச்சல்,வெட்டுக்காயம்,ரத்த அழுத்தம்,பிரசவம் என்கிற வேற்றுமையில் நோய்களெல்லாம் ஒற்றுமையாகும்.

சாக்லெட் காட்டி, முத்தம் வாங்கி,காய்ச்சல்காரரின் வாயிலிருக்கும் வெப்பமானியைப் பிடுங்க கைநீட்டி. தண்ணீர் குடுவையை கீழேபோட்டு, பாட்டுப்பாடி,அடம்பிடித்து ஓரிடத்தில் நில்லாமல் அம்மாவின் அதட்டல் பின்தொடர எல்லோர் இருக்கைக்கும் கொண்டு செல்வான் இளைப்பாறுதலை. மொட்டை வெயிலைச் சற்று கடத்திவிடும்   காற்றைப் போல அங்கே இருப்போரின் நோவையெல்லாம்  இலவசமாய்  கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைத்துக்  கொண்டிருப்பான் சலிக்கு ஊசிபோட வந்த சுட்டிப் பயல்.

தனது முறை வரும் போது திமிறி, வெளியிலோடி,   களேபரப்படுத்துவான். அவனது அழுகையும், கண்ணீரையும் கூட அந்த நேரத்து இறுக்கத்தை குறைக்கச் செலவிடுவான், சின்னக் கலைவாணன்.குழல் இனிது, யாழ் இனிது மழலைச் சொல் செய்யும், குழந்தையின் சுட்டித்தனம் வலிநிவாரண மருந்தும் செய்யும்.

13 comments:

பத்மா said...

சரி தான் குழந்தைகள் என்ன செய்தாலும் அழகு .அழுவது உட்பட .நல்ல தலைப்பு காமராஜ் சார்

நேசமித்ரன் said...

நுண்ணிய அவதானிப்பு ,எளிய கவித்துவமான நடை
இன்னும் எழுதியிருக்க கூடாதா... ?

:)

க.பாலாசி said...

மருத்துவமனையின் பொழுதுகள் இதுபோல் ஏதோவொரு சில்வண்டின் ரீங்காரம் ஒலித்தபடியே கழியும். சிலரால் அதை குயிலின் ராகமாய், மயிலின் ஆட்டமாய் ரசிக்கமுடியும்....

இந்த இடுகை, ஒரு கவிதை...

ராம்ஜி_யாஹூ said...

சிறிய பதிவாக இருந்தாலும், சிந்தனையை நீட்டிக்க செய்யும் அற்புதமான பதிவு.

மருத்துவ பணி தான் என்ன ஒரு மகத்தான பணி. நாம் மருத்துவர்களை சரியாகவே நன்றி பாராட்டுவதில்லை.

எனக்கு வேலு நாயக்கரின் வசனம் தான் நினைவுக்கு வருகிறது. நோயை குணப்படுத்திய மருத்துவரை பார்த்து உணர்வு பூர்வமாக சொல்வார் வேலு நாயக்கர்- நீ தெய்வம் யா என்று.


Title is awsome- Thanks Padma for reminding

அன்புடன் அருணா said...

ஊசிக்கான அழுகியில் ஊரைக் கூடியிருக்கும் குழந்தை, அம்மாவின் கண்ணில் ஈரம் கண்டதும் "கப்சிப்"பாகிவிடும் தருணங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்!

Hakuna matata said...

பாலுமகேந்திரா ஏதோ ஒரு படத்தில் மருத்துவமனையின் சலிப்புறச்செய்யும் காத்திருத்தலை காட்சிப்படுத்த அம்மாவின் மடியில் சின்னஞ்சிறு குழந்தையொன்று அலுத்துப்போய் கொட்டாவி விடுவதை காட்டியிருப்பார். குழந்தையை தூக்கியெடுத்து தோளில் போட்டு தூங்கவைக்க வேண்டும் போலிருக்கும். தனுஷ் படமென்று ஞாபகம்.
பேருந்து,திருமணம்,தெருவோரம்,இழவுவீடென்று மழலைகள் நம் மனதுக்கு மருத்துவம் பார்க்காத இடம்தான் ஏது?

Deepa said...

கவிதையாயிருக்கிறது இடுகை. ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க அங்கிள்.
சரி, உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.

http://deepaneha.blogspot.com/2010/03/blog-post_24.html

அமிர்தவர்ஷினி அம்மா said...

இந்த இடுகையை வாசித்தேன் என்பதை விடவும் அனுபவித்தேன்.

தலைப்பு அருமை.

உயிரோடை said...

தலைப்பு கவிதை போல இருக்கு

காமராஜ் said...

பத்மா,
நேசன்,
அருணா,
ஹச் ஏ குணா,
பாலாஜி,
ராம்ஜி,
தீபா,
அமித்தம்மா,
லாவண்யா,

எல்லோரின் அன்புக்கும் நன்றி.

சுந்தரா said...

ரசிக்கவைத்த இடுகை அண்ணா.

இப்படித்தான்,சின்னச்சின்ன விஷயங்களைக்கூட சுவாரசியமாக்கிவிடுகிறார்கள் குழந்தைகள்.

சீமான்கனி said...

மழழையின் மகத்துவம்!!! அவஸ்தைகளுக்கு இடையே அழகாய்...

பா.ராஜாராம் said...

ஆகா!..