8.3.10

நெட்டை மரங்களும், பெட்டை வீரமும்

கதாநாயகன் பறந்து பறந்து எதிரிகளைப் பந்தாடிக் கொண்டிருந்தார். கூட்டம் அவரைச்சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. சினிமாவிலும் சரி நிஜத்திலும் சரி அது தான் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம். கால் வைக்கக்கூட இடமில்லாத அந்த தனியார் பேருந்தில் ஒருவரை ஒருவர் விலக்கிக்கொண்டு எதாவதொரு கோணத்திலிருந்து  தொலைக் காட்சித் திரையில் பார்வையை பதிய வைத்திருந்தர்கள். காற்றை விடவும் கெட்டிக்காரத்தனமாக நடத்துனர் நெரிசலுக்கு இடையில் நகர்ந்து முதலாளிக்கு அடுத்த பஸ் வாங்கப் பணம் சேகரித்துக் கொண்டிருந்தார். அந்தப் பேருந்துக்குப் பின்னால் அரசுப்பேருந்து குறைந்த பயணிகளோடு திணறித்திணறித் தொடர்ந்து வந்தது. சர்வ வல்லமையும் படைத்த அரசு நடத்தும் போக்குவரத்து, லட்சக்கணக்கான பேருந்தும் ஊழியர்களும் கட்டமைப்பும் கொண்ட அது, பல நேரங்களில் தனியார் பேருந்துகளுடன் தோற்றுப் போவது இயற்கைக்குப் புறம்பான, விஞ்ஞானத்துக்கு விரோதமான வினோதம்.
 
சிவகாசியில் புறவழிச்சாலை நிறுத்தத்தில் ஒன்பது மணிப் பரபரப்பு உச்சத்தில் இருந்தது.பட்டாசுத் தொழிலளர்களை ஏற்றிக்கொண்டு போகிற பணியாளர் வாகனத்துக்கும், ஆங்கிலப்பள்ளிக்கும் தொழில் நுட்பக் கல்லூரிகளுக்கும் மாணவர்களை அழைத்துக்கொண்டு போகிற பேருந்துக்கும் பெரிதாக வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது. பட்டாசைக் கொளுத்தி ஓய்ந்தது போல நாள் முழுக்கப் புழுதி மண்டிக்கொண்டிருக்கும் சாலைகளில் இயல்பான வேகத்தடையாகப் பள்ள ங்கள் இருக்கும்.  அச்சு வேலைக்கான ப்ளாக் மேக்கிங் தகரங்களை  டீவிஎஸ் 50 யில் முன் பகுதியில் வைத்து அணைத்துக் கொண்டு போகிறவர்கலைப் பார்த்தால், பறவைக் காவடியில் பறக்கிற பக்தனைப் போலத் தோன்றும். சடாரென்று சலையின் குறுக்கே பாய்ந்து திரும்புகிற அவர்களை கெட்ட வார்த்தையில் திட்டிக்கொண்டு ப்ரேக் போடுகிற பேருந்து ஓட்டிகள்.


சூட்கேஸ், கைப்பையோடு நடக்கிற எவரையும் பின் தொடர்ந்து அவர்களிடம் பேச்சுக் கொடுக்கிற காலண்டர், பட்டாசு தரகர்கள், இரண்டு கட்டிடங்களுக்கு ஒன்றாக வியாபித்திருக்கும் டீக்கடைகள், எத்தனை பேர் வந்து குடித்தாலும் குறையாத பால் சட்டி, எண்ணெய் பிசுக்கும்,  தூசியும் கலந்த வடைகள். என்று வர்ணிக்க முடியாத விசயங்கள் நிறைந்த தமிழகத்தின் குட்டி ஜப்பான். கருப்பாக இருப்பவனுக்கு வெள்ளைச்சாமி எனப்பெயர் வைத்து சந்தோசப்பட்டுக் கொள்ளும் தமிழகம்.
 
அப்போது  இரைச்சலைக் கடந்து  பெரிதாக ஒரு சத்தம் வந்தது. ஒரு பெண்ணின் அழுகுரல்.  சாலையின் விளிம்பில்  தரையில் கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டியபடி திமிறிக்கொண்டு  அலங்கோலமாகக் கிடந்தாள். ஒரு ஆண் அவள் தலை முடியைப்பிடித்து அடித்துகொண்டிருந்தான். அவன் அவளது கணவனாகத்தான் இருக்கவேண்டும். வெறியும் போதையும் கலந்த குரூரம் கண்களிலிருந்து பிதுங்கிக்கொண்டிருந்தது. ஒரு காலத்தில் காப்பிச்சட்டி சுட்டதற்காக மருத்துவமனைக்கு அழைத்துப் போயிருக்கலாம். இரவில் நக்கக் கீரல் பட்டதற்காக பகலில் அவளுக்குப் பிடித்த சினிமாவுக்கு அழைத்துப் போயிருக்கலாம். அந்த அன்பும் அன்னியோன்னியமும் தெருப்புழுதியில் அடியும் வசவுமாக காட்சி மாற்றப்பட்டிருந்தது.  கூட்டம் கூடியது சுவாரஸ்ய மிகுதியில் வாகனங்களும் கூட நின்று வேடிக்கை பார்த்தது. திரைப்படங்களில் வருவது போலவே தாங்களாகவே ஒரு பாது காப்பு வளையம் அமைத்துக் கொண்டு வேடிக்கை பார்த்தார்கள். வேடிக்கை பார்த்தவர்கள் அனைவருமே வேஷ்டி கட்டியவர்கள், கால்சராய் அணிந்தவர்கள்.

அடிபட்டுக்கொண்டிருக்கிற பெண்ணின் அழுகுரல் எல்லா இரைச்சலையும் தாண்டி ஒலித்துக்கொண்டே இருந்தது. அழுகை நிராதரவின் வெளிப்பாடு.  அதற்காக வருந்துவது மனிதாபிமானம். அதையும்தாண்டி ஆதரவுக்கரம்
நீட்டுவதற்கு மனிதாபிமானம் குழைத்த துணிச்சல் வேண்டும். அந்த துணிச்சலோடு கூட்டத்துக்குள்ளிருந்து ஒருவர் வந்தார். அடித்துக்கொண்டிருந்தவனை இடது கையால் தலை முடி பிடித்து கீழே தள்ளி விட்டார்.  சுதாரித்து எழுந்த அவன் ஒரு அரிவாளை வெளியில் எடுத்து மிரட்டினான். சுற்றி நின்ற கூட்டம் இப்போது கிராபிக்ஸில் காண்பிக்கிற மாதிரி சடுதியில் காணாமல் போனது.

''' வெட்டுடா தேவிடியாப் பயலே எத்துன பேர வெட்டுவ ''
.
லேசாகத் தயங்கியவனின் பிடதியில் இப்போது  அடிவிழுந்தது. அவன்கையிலிருந்த ஆயுதம் கீழே விழுந்தது.
தயக்கம் கலைந்தது இன்னும் சிலர் செத்த பாம்பு அடிக்கவந்தார்கள். அவன் கீழே கிடந்தான். ஆட்டோ  வந்தது. போலீஸ் வந்த பின்னால் தைரியமாக இன்னும் அதிகமான கூட்டம் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. காப்பாற்ற வந்த அந்த அம்மா தனது மார்ச் சேலையைச் சரிசெய்தபடி கூட்டத்ததைப் பார்த்தார்.

எல்லாருடைய மூக்குக்கும் உதட்டுக்கும் நடுவில் வித விதமான அளவுகளில் முடிகளிருந்தது. இலக்கணங்கள் எழுத்து வடிவில் இருக்கிறது, வாழ்க்கை இயல்பானதாகவே எப்போதும் இருக்கிறது.



(  இது ஒரு மீள்பதிவு. இதுதான் என்னுடைய முதல் பதிவும். )



14 comments:

சந்தனமுல்லை said...

அருமை அண்ணா..அப்படியே கண்முன்னால் காட்சிகளை கொண்டு வந்துட்டீங்க..

“இந்த இருவது வருஷ தாம்பத்தியத்துலே ஒரு நாள் கூட அவளை நான் அடிச்சது இல்லே” என்று பெருமையாக (!!) சொல்லிக்கொள்ளும் மனிதர்களை கண்டது நினைவுக்கு வந்துவிட்டது!

எல் கே said...

//“இந்த இருவது வருஷ தாம்பத்தியத்துலே ஒரு நாள் கூட அவளை நான் அடிச்சது இல்லே//

appadi yarum illainu solla vareengala?

அண்ணாமலையான் said...

அருமையா எழுதறீங்க... வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

அருமையான பதிவு.

அன்புடன் அருணா said...

/கருப்பாக இருப்பவனுக்கு வெள்ளைச்சாமி எனப்பெயர் வைத்து சந்தோசப்பட்டுக் கொள்ளும் தமிழகம். /

குபுக்க்கென்று சிரித்து விட்டேன்....

மகளிர் தினத்தில் ஒரு வீரமங்கையின் தரிசனம்.நன்று.

க.பாலாசி said...

இன்றைய நாளுக்காக பொருத்திப்பார்க்கவேண்டிய இடுகை....

//எல்லாருடைய மூக்குக்கும் உதட்டுக்கும் நடுவில் வித விதமான அளவுகளில் முடிகளிருந்தது.//

முடிமட்டுமே இருந்தது என்று சொன்னாலும் தகும்...

உயிரோடை said...

த‌லைப்பை ம‌ட்டும் மாத்தி வைக்க‌லாமே அண்ணா,

பெட்டை வீர‌மென்ப‌து பெண்க‌ளை தாழ்த்தி சொல்வ‌து அல்ல‌வா?

காமராஜ் said...

லாவண்யா.

இது 2008 ல் எழுதியது.
அதனால் சரியென்று சொல்லவரவில்லை.
பாரதி 'நெட்டைமரங்களென நிற்கும் "பொட்டைப் புலம்பல்" இப்படிப் பாஞ்சாலி சபதத்தில் எழுதியிருப்பார்.
அதை மாற்றி எழுதுவதாக நினைத்துக்கொண்டு
'பெட்டை வீரம்' என்று எழுதிவிட்டேன். புலம்புவதுதான் அடையாளம் என்பதை நிராகரித்து எழுதினேன். பின்னர் நானே அது சரியா என குழம்பினேன்.பதில் வந்துவிட்டது.

காமராஜ் said...

நன்றி...

முல்லை,
LK,
அண்ணாமலையான்,
ராமலஷ்மி,
அருணா,
பாலாஜி.

ராம்ஜி_யாஹூ said...

அருமையான பதிவு.

இந்த மகளிர் தினத்திலாவது நாம் ஒரு முடிவு எடுப்போம், மனைவி குழந்தைகளை (பிற மனிதர்களை) அடிக்க மாட்டோம் என்று.

சந்தனமுல்லை said...

LK,

நான் சொல்ல வந்தது - இதெல்லாம் பெருமையாக சொல்லிக்கொள்ளும் விஷயமா? கணவன் அடித்தால் அது வன்முறை இல்லையா? அதற்கு பின்னால் அன்பு இருப்பதாக அல்லவா சொல்லப்படுகிறது!

அடிப்பது- பிறர் மீது செலுத்தும் வன்முறை- மனைவியை அடித்தால் அதை வன்முறையாக பார்ப்பது இல்லை - அடிப்பது கணவனது உரிமை என்பது போலல்லவா நடந்துக்கொள்கிறார்கள்!

அம்பிகா said...

இடுகையை படித்ததும், என் மனதில் என்ன தோன்றியதோ, அதை லாவண்யா வெளிப்படுத்தியிருக்கிறார்.

முதல் இடுகையா? அருமையா எழுதியிருக்கீங்க அண்ணா.

காமராஜ் said...

நன்றி யாஹூ ராம்ஜி சார்.

0
நன்றி அம்பிகா.

கிராமங்களில் பொதுவாக உழைப்புக்கும்,வீரத்துக்கும் பாலியல் பேதம் இல்லை.அதுதான் இயல்பு. தலைப்பு நெருடுகிறது.
பெட்டை என்கிற வார்த்தையே முகஞ்சுழிப்பிற்கானது
இல்லையா அம்பிகா?

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

குடும்ப வன்முறையை ஒரு ஆச்சரியமான வீரமாக வரிந்து கொள்ளும் பொது புத்தி இன்னும் தென் மாவட்டங்களில் இருக்கிறது. இது பாரதத்தின் பல பாகங்களில் இருந்தாலும் கண்ணுக்கு நெருக்கத்தில் தெரிவது தென் தமிழ் நாடே.!! யாராவது எதிர்க்கதான் வேண்டும்.. கூட்டத்தில் தைரியம் என்பது சில சமயம் கேலி கூத்தாகிவிடும் அபாயமும் இருக்கிறது.

மீசை பற்றிய குறிப்பு நல்ல நகைச்சுவை..!!