நல்ல வேளை இந்த முறை செயற்கைப் பற்று உடலெங்கும் புடைத்திருக்க விறைத்துக்கொண்டு கொத்தளத்திலிருந்து கொடியேற்றும் ஆட்சியாளர்களைப் பார்க்கமுடியாமல் போனது.நாடு பற்றியும் மக்கள் பற்றியும் வடிக்கிற நீலிக்கண்ணீர் பட்டுத்தெரிக்கிற தொலக் காட்சியிலிருந்து தப்பித்தாகிவிட்டது.நடிக நடிகைகளின் சுதந்திரதின பேருரைகளில் மாட்டிக்கொளாமாலும்,சிறப்புத் திரைப்படம் சிறப்பு மானாட மயிலாட,சிறப்பு சொறிந்து விடுதல் எல்லாவற்றிலிருந்தும் தப்பித்தாலும் அதித்தயாரித்து தருகிற அதே சென்னையில் தான் இருந்தேன்.befi(tn) ன் மாநிலச் செயற் குழுக் கூட்டம்.
மதுராந்தகத்தில் முழிக்கும் போது ஊதக்காத்து வீசியது.நிஜம்மாவே மழைதன் பெய்திருக்கிறது.இப்படி நாட்கள் சிறுவயதிலிருந்தே சொல்லில் வடிக்க முடியாத உணர்வுகளைக் கொண்டுவரும்.நமக்குத் தெரியாமல் மழைவந்து நனைத்துப் போட்டிருக்கிற முற்றம்.வழக்கமான காலைப்பொழுது போலல்லாமல் ஓசைகுறைந்து,அமைதியோடு குளிர் குழைந்திருக்கும் அந்தக்காலை அவ்வளவு அலாதியானது.அன்றைக்கு அம்மா போடுகிற வரக்காப்பியின் வாசமும் அதன் சூட்டுக்கும்,வெல்லக்கட்டி இனிப்புக்கும் இருக்கும் கிறாக்கி சொல்லிமாளாது. கொடியில் காயப்போட்ட டவுசர் சட்டை நனைந்திருந்தாலும் கூட ஒரு குதூகலம்கூட வரும். அதோடு கூட மனதுக்குப்பிடித்த வேலவரையும்,பவுலையும் கூட்டிக்கொண்டு காடுகளில் ஈரத்தடம் பதித்துக்கொண்டு நடப்போம்.மண்புழுக்களின் பயணத்தை,பாப்பாத்திப்பூச்சியின் பஞ்சு தேகத்தை,ரயில்பூச்சியின் மஞ்சள் கோடுகளை பார்த்தபடி கண்மாய் வரை போய்வரும் நாட்கள் இனிதானது.
அந்த நாட்களை மூஞ்சியிலடித்தபடி குளிர்காற்று முத்துநகர் வண்டியை அலைக்கழித்துக் கொண்டிருந்தது.
நாங்கள் ஐந்துபேர் எல்லாவிளையாட்டிலும் ஒரே பக்கம் கிடைத்தால் விளையாடுவது இல்லையானால் அப்படி விளையாட்டுக்களை தெரிவு செய்துகொள்வது தான் பழக்கமாக இருந்தது.குஸ்தி,ஓட்டப்பந்தயம் போன்ற எதிரெதிர் விளையாட்டுக்களை எங்களுக்குள் வராமல் பார்த்துக்கொள்வோம்.இருந்தாலும் ஒரு கேலிப்பேச்சில்,சினிமா விவாதத்தில்,கட்சிப்புரிதலில் விவாதம் வரும் சூடுபிடிக்கும்,அது தனிநபர் தூற்றுதலாக வரும் போது கலைந்து போவதும் மறு பொழுது விடியும் போது ஓடிப்போய் ஒன்றுசேர்ந்து கொள்வதுமான சகஜம் எவ்வளவு புனிதமானது.
சினிமாவுக்கு ப்போவதெனத் தீர்மானமாகும்.அதுவும் செகண்ட்ஷோ.எல்லோரும் ஒன்றாகப்படுக்கிற ஊர்மடத்துக்கோ வேதக்கோயிலுக்கு கொண்டுபோகிற கோரப்பாய்க்குள் சட்டையை மடித்து ஒளித்து வைத்திருப்போம். டிக்கெட்டோடு சேர்த்து சிகரெட்டுக்கும்,பட்டர் பன்னுக்கும் காசு தேத்த வேண்டும்.வள்ளிமுத்துவிடம் காசு இருக்காது.சோர்ந்து போவான்.உடனே எம்ஜி 'மாப்ள ஒரு ரூபா கொடு' என்று வாங்கிக்கொடுபோய் வெட்டுச்சீட்டில் உட்காருவான்.ஜெயிப்பான். ஊரே திரும்பிப்பார்க்கிற சத்ததில் கூச்சல் போட்டபடி சைக்கிள் பறக்கும் சாத்தூரை நோக்கி.
அப்படித்தான் குற்றாலத்துக்கு சைக்கிளில் போகிற திட்டம் தயாரானது. சிறுகச்சிறுக காசு சேர்த்தோம்.எங்கம்மா ,எலுமிச்ச சாதமும்,காணப்பயறு துவையலும் செய்தால் ஊர்மணக்கும்.அரிசி மட்டும் பொதுச்செலவில் வாங்கித்தந்தோம்.ஓயாமல் செயின் கழண்டு கழுத்தறுக்கும் எம்ஜியின் சைக்கிளை கொண்டுபோய் ஜானகிராம் சைக்கிள் கம்பெனியில் சரி பண்ணினோம்.வள்ளிமுத்துவுக்கு சைக்கிள் இல்லை.கிளியம்பட்டிக்கு பஸ்ஸில் போய் தங்கச்சி மாப்பிள்ளையின் சைக்கிளை இரவல் வாங்கிக்கொண்டுவந்தான்.லூசுக்கருப்பசாமியிடம் கெஞ்சி அவனது காத்தடிக்கும் பம்பை வாங்கிக்கொண்டோ ம்.மாசிலாமணியின் வீட்டில் சுடலைசாமி கோயிலுக்குப்போனார்கள் அவன் வீட்டில் சண்டைபோட்டு குற்றாலத்துக்கு வருவதாக உறுதிசெய்துகொண்டான்.வேலவர் வீடு சம்சாரி வீடு அவனுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் மாடு குளுப்பட்டுவது.படப்பு சரிசெய்வது.தோட்டத்தில் அடுக்கிவைத்திருக்கும் பருத்திமாரை கொண்டுவந்து சேர்ப்பதென, பாடுகள் இருந்தது.அதை ஆளும்பேருமாக சனிக்கிழையே முடித்துக்கொடுத்தோம்.
தூரல் விழுகிற நேரமெல்லாம் குற்றாலப்பேச்சே எங்களோடு இருந்தது. அப்பவும் கூட வள்ளிமுத்து 'ஏ மாப்ள ஒரு டவுட்டு கேலிபண்ணாத அவ்ளோ தண்ணி, மல மேல எப்பிடி இருக்கும்' என்று வெள்ளந்தியாக்கேப்பான்.அதுக்கு பவுலு 'ஒங்கக்கா, தங்கச்சிமாரெல்லாம் கொடத்துல சுமந்துகொண்டுபோய் ராத்த்திரியோட ராத்திரியா ஊத்திட்டுவருவாளுக' என்று கேலி சொல்லுவான். சிரிப்போம்.விடிந்தால் ஞாயிற்றுக்கிழமை. அன்றுதான் போவதாகத்திட்டம்.சனிக்கிழமை இரவு அந்தோணியின் அய்யாவை பாம்புகடித்துவிட்டது. சாத்துர் ஆஸ்பத்திரியில் அபாயக் கட்டம் நீங்க ரெண்டு பொழுதாகலாம் என்று சொன்னார்கள்.சிரிப்பும் கேலியுமாக இருக்கும் அவன் கலங்கியிருந்தான்.நாங்கள் எல்லோரும் அவனோடு இருந்தோம்.ஆஸ்பத்திரி வராண்டாவில் ஊதக்காத்து அடித்தது. அதன் பிறகு நாங்கள் ஒன்றாகக் குற்றாலம் போகமுடியவில்லை.வேலைக்கு போய், வசதியாகி,நண்பர்களோடு குடும்பத்தோடு போகிற நேரமெல்லாம் போகமுடியாத குற்றாலமும்,நண்பர்களும் கண்ணுக்குள் அருவியாவார்கள்.
நகர நாட்கள் அப்படியில்லை. 1990 ல் என் ஜி ஓ காலணியில் இரவு முழுக்க வயிற்றுவலியால் துடித்துக்கொண்டிருந்த மனைவியோடும் கைக்குழந்தையோடும் திகைத்த போது பத்தாவது வீட்டிலிருந்து மெக்கானிக் முருகேசன் மனைவியோடு ஓடிவந்தார்.கைக்குழந்தையாயிருந்த சூரியாவை அவரது மனைவி பார்த்துக்கொள்ள என்னோடு கூட வந்தார்.எதுத்த வீட்டில்தான் குடியிருந்தார், சக சிப்பந்தி அலுவலக உறவு.மறுநாள் காலை பத்துமணிக்கு வங்கியில் வந்து 'குட்மார்னிங் தோழர் என்ன ராத்திரி வீட்டுல லைட் எரிஞ்சது, அப்பிடியா அக்காவுக்கா, வயித்து வலியா, ஐயய்யோ' என்று வார்த்தையில் சோகத்தைக் குழைத்துக்கொடுத்தார்.அப்புறம், வீட்டில் என்ன என்ன முதலுதவி மருந்துகள் வைத்திருக்கவேண்டுமென்கிற பட்டியலையும் சொன்னார்.நகரம் எப்படி தன்னை பிரச்சினைகளில் இருந்து தனிமைப்படுத்திக்கொள்ளும் என்பது கேள்வி ஞானமாய்த் தெரியும், ஆனால் அனுபவித்த முதல் சம்பவம் அது.
அன்று மதிய வேளை இடைவேளையெல்லாம் எங்கள் வீட்டையும்,குழந்தைகளையும் பற்றிப்பேசிக்கொண்டே இருந்தார். அவர் போனப்பிறகு புதிதாக வந்த ஆபிஸர் மேடம் 'மனுச ரொம்பக்'கெட்டிக்காரன்,பேசிப்பேசியே பிள்ளப்பெற வச்சிருவான்' என்று சொன்னார்கள் சிரித்து கழித்தோம்.
அந்த நினவுகளோடே முத்து நகர் துரித வண்டியின் ஜன்னல் வழியோடியது தூரங்கள்.எல்லாம் தனிமையின் அழுத்தம்.அதை இப்படி நினைவுகளோடும் இன்னும் சில புத்தகங்களோடும் கடத்தவேண்டிய நிர்ப்பந்தம்.சனி இரவு வாங்கி வைத்திருந்த ஆனந்த விகடனில் தமிழ்ச் சினிமாவில் பாராவின் கவிதையை அச்சில் படித்துவிட்டுப் புரட்டும்போது 'தமிழ்ச் சினிமாவில்புதிய புலவர்கள்' என்கிற கட்டுரை இருந்தது.அசட்டையாக விட்டுவிடேன்.செங்கல் பட்டில் வண்டி நின்ற போது மணி 6.30 இன்னும் ஒரு மணிநேரம் ஆகும் என்று பக்கத்து இருக்கைக்காரர் சொன்னார்.மீண்டும் விகடனுக்குள் ஒளிந்து கொண்டேன்.புதிய புலவர்களின் புகைப்படத்தில் ஒரு தெரிந்த முகம்,ஆச்சரியம் ஆமாம் நமது 'ஆடுமாடு' பதிவர் ஏக்நாத். வம்சம், ஊலல்லா, உத்தமபுத்திரன் ஆகிய மூன்று படங்களுக்கு பாட்டெழுதி யிருக்கிறார். குற்றாலக் குளுமையோடும்,நேசமிக்க கால்நடைகளின் வாசத்தோடும், நிஜக்கிராம மக்களின் வலியோடும் இதையெல்லாம் குழைத் தோழமை வலிமையோடும் பாட்டுக்கள் வரும்.காத்திருக்கிறோம் தோழர் ஏக்நாத்.
14 comments:
நண்பர்களுக்கு என் வாழ்த்துக்கள்
ஒரு ஊதகாத்தும் பல நினைவும். பகிர்வு நல்லா இருக்கு
பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள். சினிமாவிற்குள் நுழைந்த பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ஏக்நாத்துக்கு வாழ்த்துகள். ரெண்டு விஷயத்துக்கு நன்றி. பகிர்ந்தமைக்கு ஒன்னும், பின்னூட்டம் போடும்போது பெரிய சங்கடமா இருக்கும். அதைப் போக்க அவர் பேரை சொன்னதுக்கும்:). காலையில் குற்றாலக் குளியல் சுகம்.
. ஏக்நாத் Topnath என பின்னூட்டம்ஆன போதே தெரிந்து கொண்டேன் . மழை , வலை நண்பர்கள் அந்த நாள் நினைவு ஆக பகிர்வு அருமை
தோழர் வணக்கம்.
இதெல்லாம் தெரிய வேண்டாம்னுதான்
ஆடுமாடுக்குள் ஒளிந்துகொண்டிருக்கிறேன்.
பாடல் எழுதுவது பல ஆண்டுகளாக தொடர்கிறது.
பெரிய ஹிட் என்று எதுவும் இல்லை.
நன்றி.
என் மெயில் ஐடி. egjira@gmail.com
உங்க மெயில் ஐடி கொடுங்க.
ஏக்நாத்துக்கு வாழ்த்துகள்....
தோழரே வணக்கம்... நலமா?
பகிர்வுக்கு நன்றிங்க
//நமக்குத் தெரியாமல் மழைவந்து நனைத்துப் போட்டிருக்கிற முற்றம்//
பழைய நினைவுகளை கிளறிவிட்டு வேடிக்கைப்பார்க்கிறீர்கள். என்னன்னமோ நினைவுகளின் நீட்சி எட்டிப்பார்க்கிறது.
பதிவர் ஆடுமாடு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..
அட!அப்பிடியா!ஆடுமாடுக்குப் பூங்கொத்து வாழ்த்துக்கள் ...பகிர்ந்த உங்களுக்கும்!
ஆடுமாடு ஏக்நாத்திற்கு வாழ்த்துகள்
Wow! Very nice.
Kamaraj gives a personal touch to everything. Great. Feel like reading again due to his fun in writing with rural attachment. Great.
Congrats to Mr. Eknath. Good job sir.
மழை நண்பர்கள் என்றும் எனக்கு முதலில் புரியல படித்ததும் ஆஹா என்ன ரசனை என்னை அப்படியே கட்டி போட்டிடீங்க...அண்ணனுக்கும் ஆடுமாடு (மன்னிக்கவும்)அவர்களுக்கும் வாழ்த்துகள்...நன்றி...
இதுக்கு பெயர் என்ன காமு? கர கர வென கண்ணின் பாலை அறுக்கிறது, எழுத்து. திசையை நோக்கி பொங்கள் என்பார்கள். அப்படி,
ஒரு கும்பிடு அய்யா!
ஏக்னாத்தை விட ஆடு மாடு நல்லாருக்கு ஆடுமாடு.. கூப்பிட்டு பழகிய வாயை, என்னதான் கட்டுங்க. நிக்காது. நீங்களும் அப்படியே இருங்க. நாங்களும் அப்படியே இருக்கோம்.
காமு, நன்றி!
வாழ்த்துக்கள் ஆடு மாடு சார்
Post a Comment